கோடீஸ்வரர் ரோபர்ட் குவாக் பிஎன் அரசாங்கத்தைக் கவிழ்க்க டிஏபிக்குப் பண உதவி செய்வதாகக் கூறப்படுவதை மறுத்துள்ளார் என்பதைக் கேட்டு மகிழ்ச்சி கொள்கிறார் சுற்றுலா, பண்பாட்டு அமைச்சர் நஸ்ரி அப்துல் அசீஸ்.
ஆனால், அதற்குமுன் தொழிலதிபரை வசைபாடியதற்கு அவர் வருத்தப்படத் தயாராக இல்லை.
“முன்பே அவர் மறுத்திருந்தால் இவ்வளவு நடந்திருக்காது.
“ஆனால், விவகாரத்தை விளக்கி அவரது(குவாக்) அலுவலகம் அறிக்கை வெளியிட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அரசாங்கத்தை வெறுக்கக் காரணமில்லை என்று கூறியிருப்பது அவருடைய நல்லெண்ணத்தைக் காண்பிக்கிறது. அதற்காக அவருக்கு நன்றி”, என நஸ்ரி இன்று கோலாலும்பூரில் செய்தியாளர்களிடம் கூறினார்.