மலாய் வாக்குகளை வெல்ல, பக்காத்தான் ஹராப்பானுக்கு ஒரு தூண்டுதலாக செயல்பட தயாராக இருப்பதாக டாக்டர் மகாதிர் முகமட் கூறினார்.
தனக்கு 92 வயதான போதும், ஹராப்பானுக்கு உதவ தான் தயாராக இருப்பதாக அந்த முன்னாள் பிரதமர் தெரிவித்தார்.
“எனக்கு இப்போது 92 வயதாகிறது, எத்தனை காலத்திற்கு என்னால் பிரதமராக இருக்க முடியும்? எனவே, மலாய்காரர்களின் வாக்குகளை ஈர்க்க, நான் ஹராப்பானுக்குப் ‘பொறி’யாக இருக்கத் தயார்,” என்று அவர் சொன்னார்.
தனக்கு இருக்கும் 22 ஆண்டுகால பிரதமர் அனுபவத்தால், தான் ஹராப்பானின் பிரதமர் வேட்பாளராக இருக்க சம்மதித்ததாகவும் அவர் சொன்னார்.
“நான் அந்தப் பதவியை வகிக்க வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டார்கள், நானும் ஏற்றுக்கோண்டேன். வயது 93 ஆகப்போகிறது, பிரதமராக நீண்ட காலத்திற்கு இருக்க முடியாது, சாகும் வரை பிரதமராக இருக்க எனக்கு விருப்பம் இல்லை.
“ஆனால், நான் எனது அனுபவத்தைக் கொண்டு, நாட்டின் கடன்களைக் கையாளக்கூடிய புதிய அரசாங்கத்தை உருவாக்க ஹராப்பானுக்கு உதவ முடியும்,” என்று அவர் கூறினார்.