வட மாகாண ஆளுனராக கே.சி.லோகேஸ்வரன் – “முதல் தமிழர்”

மேல் மாகாண ஆளுனராகப் பணியாற்றும், கே.சி.லோகேஸ்வரன் வடக்கு மாகாண ஆளுனராக, நியமிக்கப்படவுள்ளார் என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவின் எட்டு மாகாணங்களின் ஆளுனர்களுக்கு, விருப்ப அடிப்படையில், இடமாற்றங்களை வழங்க சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

ஆளுனர் பதவியில் மூன்று ஆண்டுகள் பணியாற்றிய எட்டு மாகாணங்களின் ஆளுனர்களை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பாகிஸ்தான் புறப்பட முன்னர் கடந்த வியாழக்கிழமை, சந்தித்துப் பேசினார்.

இதன் போது, ஆளுனர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகளாக இருப்பினும், நிர்வாக சீரமைப்புகளுக்காக, ஆளுனர்களை விருப்ப அடிப்படையில் இடம்மாற்றும் யோசனை சிறிலங்கா அதிபரால் முன்வைக்கப்பட்டது.

ஆளுனர்கள் தமக்கிடையில் பேசி, தாம் பணியாற்ற விரும்பும் மாகாணம் எது என்று கேட்கப்பட்டது.

“சிறிலங்கா அதிபர் நாம் பணியாற்ற விரும்பும் மாகாணம் எது என்று கேட்டார். எமது விருப்பத்தை தெரிவித்துள்ளோம். சிறிலங்கா அதிபர் நாடு திரும்பியதும், இதுபற்றி இறுதி முடிவை எடுப்பார்” என்று, ஆளுனர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த மாற்றங்களுக்கமைய, மேல் மாகாண ஆளுனர், கே.சி.லோகேஸ்வரன், வட மாகாண ஆளுனராக நியமிக்கப்படவுள்ளார். வடமாகாணத்தின் ஆளுனராக தமிழர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளது இதுவே முதல்முறையாகும்.

தற்போது, வட மாகாண ஆளுனராக உள்ள ரெஜினோல்ட் குரே, மத்திய மாகாண ஆளுனராக நியமிக்கப்படவுள்ளார்.

ஊவா மாகாண ஆளுனர் ஜெயசிங்க, வடமத்திய மாகாணத்துக்கும், மத்திய மாகாண ஆளுனர், நிலுக்க எக்கநாயக்க, சப்ரகமுவ மாகாணத்துக்கும், சப்ரகமுவ ஆளுனர் மொர்ஷல் பெரேரா தென் மாகாணத்துக்கும் மாற்றப்படவுள்ளனர்.

தென் மாகாண ஆளுனர் ஹேமகுமார நாணயக்கார, மேல் மாகாணத்துக்கும் வடத்திய மாகாண ஆளுனர் பி.பி.திசநாயக்க,வடமேல் மாகாணத்துக்கும் மாற்றப்படவுள்ளனர்.

எனினும், ஊவா, தென் மாகாணங்களின் ஆளுனர்களின் இடமாற்றங்கள் இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை.

கிழக்கு மாகாண ஆளுனர் றோகித போகொல்லாகம அண்மையிலேயே நியமிக்கப்பட்டவர் என்பதால், அவர் இவர் இடமாற்றம் செய்யப்படமாட்டார்.

-puthinappalakai.net

TAGS: