எதிர்வரும் மே 18ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் அரசியல் கலப்பு வேண்டாம் என்று காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முள்ளிவாய்க்காலுக்குச் சென்று அஞ்சலி செலுத்தவுள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டோரின் மன்னார் மாவட்ட சங்கத் தலைவி மனுவல் உதையச்சந்திரா தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, “காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஒன்றிணைந்து, பொது அமைப்புகளின் ஊடாக, மன்னார் மாவட்டத்திலிருந்து முள்ளிவாய்க்கால் நினைவு நாளன்று, அங்கு சென்று அஞ்சலி செலுத்தவுள்ளோம். எமது நினைவுகூரல் நிகழ்வில் அரசியல்வாதிகளை நாங்கள் எதிர்பார்க்கவில்லை.
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் ஆகியோரை நாங்கள் எதிர்பார்க்கின்றோம். பாதிக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கின்ற பொது அமைப்புகளைச் சேர்ந்த அனைவரும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கின்றோம். குறித்த நிகழ்வில் அரசியல்வாதிகளை சம்பந்தப்படுத்த நாம் விரும்பவில்லை.” என்றுள்ளார்.
-4tamilmedia.com