டொனால்டு டிரம்ப் – கிம் ஜோங்-உன் நேரடிப் பேச்சுவார்த்தை: ஜூன் 12ல் சிங்கப்பூரில் நடக்கும்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் வட கொரியத் தலைவர் கிம் ஜோங்-உன் முதல் முறையாக சந்திக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உச்சி மாநாடு சிங்கப்பூரில் ஜூன் 12ம் தேதி நடக்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.

சில மாதங்கள் முன்பு வரை கடுமையான சொற்போரில் ஈடுபட்டு வந்த இரண்டு நாடுகளின் தலைவர்களும், அடுத்தடுத்து எதிர்பாராத விதமாக நடந்த நேர்மறையான நிகழ்வுகள், மற்றும் ராஜீய முயற்சிகளின் விளைவாக தற்போது பேச்சுவார்த்தை வரை வந்துள்ளார்கள்.

கடந்த மார்ச் 9-ம் தேதி முதல் முறையாக, கிம் விடுத்த நேரடிப் பேச்சுக்கான அழைப்பை ஏற்று உலகை அதிர வைத்தார் டிரம்ப்.

சமீப வாரங்களில் இரண்டாவது முறையாக அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மைக் பாம்பியோ புதன்கிழமை வடகொரியா சென்று திரும்பினார். அவரது பயணத்தின்போது வடகொரியாவின் சிறையில் இருந்த மூன்று அமெரிக்கக் குடிமக்களை அந்நாடு நல்லெண்ண நடவடிக்கையாக விடுவித்தது. அவர்கள் உடனடியாக அமெரிக்கா திரும்பினர். அப்போது டிவிட்டர் மூலம் கருத்துத் தெரிவித்த டிரம்ப், கிம்- பாம்பியோ இடையே நடந்த சந்திப்பு நல்லவிதமாக இருந்ததாகவும், உச்சி மாநாட்டுக்கான தேதியும், இடமும் முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில் அடுத்த நாளே டிரம்ப்-கிம் சந்திப்புக்கான தேதியும், இடமும் அறிவிக்கப்பட்டுள்ளது. வடகொரியாவில் இருந்து விடுவிக்கப்பட்ட அந்த மூன்று பேரும் அமெரிக்கா வந்தடைந்த சில மணி நேரங்களில் இந்தத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்கொரியா-வுக்கும் வட கொரியாவுக்கும் இடையில் நிலவி வந்த பதற்றம் அடிப்படையான சிக்கலாக இருந்த நிலையில், வட கொரியா – தென் கொரியா உறவில் பதற்றம் தனியத் தொடங்கியது. பகைமை பாராட்டிவந்த இரண்டு சகோதர நாடுகளும் கூட்டாக ஒரே கொடியின் கீழ் குளிர்கால ஒலிம்பிக்கில் பங்கேற்றன. கிம் ஜோங்-உன்னின் சகோதரி தென்கொரியா சென்று வந்தார். அமெரிக்கா சென்ற தென் கொரிய அதிகாரிகள் முதலில் கிம் விடுத்த நேரடிப் பேச்சுக்கான அழைப்பை டிரம்ப் ஏற்றுக்கொண்டதை உறுதி செய்தனர். பிறகு இதை உறுதி செய்து டிரம்ப் டிவீட் செய்தார்.

சிங்கப்பூர் ஏன்?

சிங்கப்பூருக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நெருக்கமான நட்புறவு இருக்கிறது. அதே நேரம் சிங்கப்பூர்-வட கொரியா இரு நாடுகளுக்கும் இடையில் தூதரக உறவுகள் உள்ளன. ஆனால், வடகொரியா அடுத்தடுத்து நடத்திய அணு ஆயுத மற்றும் ஏவுகணைச் சோதனைகளைத் தொடர்ந்து சர்வதேசத் தடைகள் கடுமையானபின், வடகொரியாவுடனான எல்லா வர்த்தக உறவுகளையும் சிங்கப்பூர் துண்டித்துக்கொண்டது.

உயர்மட்ட ராஜீய நிகழ்வுகளை நடத்துவதற்கு சிங்கப்பூர் அவ்வப்போது தேர்ந்தெடுக்கப்படுகிறது. 2015ம் ஆண்டு, சீனா மற்றும் தைவான் நாடுகளின் தலைவர்கள் 60 ஆண்டுகளில் முதல் முறையாக சந்தித்துப் பேசிய நிகழ்வும் சிங்கப்பூரில்தான் நடந்தது.

இந்த சந்திப்பை நடத்துவதற்குப் பரிசீலிக்கப்பட்ட பிற இடங்களில் மங்கோலியா, இரண்டு கொரிய நாடுகளுக்கும் இடையிலான ராணுவ நீக்கம் செய்யப்பட்ட பகுதி ஆகியவையும் அடங்கும்.

எதைப் பற்றிப் பேசுவார்கள்?

பேச்சுவார்த்தையின் முக்கிய அம்சமாக வட கொரியா தம் வசம் உள்ள அணு ஆயுதங்களைக் கைவிடவேண்டும் என்று அமெரிக்கா கோரும்.

வட கொரியா இந்தப் பேச்சுவார்த்தையில் எதை எதிர்பார்க்கும், எதைக் கைவிட முன்வரும் என்பது குறித்து அதிகாரபூர்வமாக எதுவும் தெரியவில்லை. ஆனால், தமது நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகளை அகற்றக் கோருவது மற்றும் கொரிய தீபகற்பத்தில் உள்ள 30,000 அமெரிக்கத் துருப்புகள் ஆகியவையே வடகொரியா பேச்சுவார்த்தை நடத்த விரும்பும் பொருள்களாக இருக்கும்.

சர்வதேசத் தடைகளை மீறி 2006 முதல் வட கொரியா 6 அணு ஆயுதச் சோதனைகளை நடத்தியுள்ளது. இதனால் அது பொருளாதாரத் தடைகளையும், கண்டனங்களையும் எதிர்கொண்டபோதும் தனது நாட்டுப் பாதுகாப்புக்கு அணு ஆயுதங்கள் தேவை என்ற கருத்தை அது வலியுறுத்தி வந்துள்ளது. இந்த அணு ஆயுதத் திட்டங்களை முழுவதும் வடகொரியா விட்டுவிடவேண்டும் என்பதே அமெரிக்காவின் எதிர்பார்ப்பு. இவ்வளவு கடின முயற்சிகள் மூலம் அடைந்த அணு ஆயுதத் திட்டத்தை அவ்வளவு எளிதாக வட கொரியா விட்டுக்கொடுக்குமா என்பதில் ஆய்வாளர்கள் ஐயம் கொண்டுள்ளனர்.

ஆனால், இந்த சந்திப்புக்கு முன்னதாக எல்லா அணு ஆயுதச் சோதனைகளையும், பேலிஸ்டிக் ஏவுகணைப் பரிசோதனைகளையும் நிறுத்தி வைப்பதாக வடகொரியத் தலைவர் கிம் ஜோங்-உன் அறிவித்துள்ளார். ஒரு அணு ஆயுதச் சோதனை சாலையையும் மூடப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

உலக அமைதிக்கு…

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட எனக்கும் கிம் ஜாங்-உன்னுக்கும் இடையிலான சந்திப்பு சிங்கப்பூரில் ஜூன் 12ம் தேதி நடைபெறும் என்று தமது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்த டிரம்ப், உலக சமாதானத்துக்கான சிறப்புத் தருணமாக இதை மாற்ற முயற்சி செய்வோம் என்றும் கூறியுள்ளார். -BBC_Tamil