வான் அசிஸா: மந்திரி பெசார் பதவிக்கு முன்மொழியப்பட்டிருந்தவர்களில அமிருடினும் ஒருவர், ஆகவே பிரச்சனை இல்லை

 

சிலாங்கூரின் புதிய மந்திரி பெசார் பதவிக்கு அமிருடின் ஷாரி முன்மொழியப்பட்டதில் பக்கத்தான் ஹரப்பானில் ஓர் உடன்பாடு இல்லை என்று கூறப்படுவதை துணைப் பிரதமர் வான் அசிஸா வான் இஸ்மாயில் நிராகரித்தார்.

தொடக்கத்தில், சிலாங்கூர் அரண்மனையிடம் அளிக்கப்பட்ட மந்திரி பெசார் வேட்பாளர்கள் பட்டியலில் அமிருடின் ஷாரியின் பெயரும் இடம் பெற்றிருந்ததை பிகேஆர் தலைவர் சுட்டிக் காட்டினார்.

வேட்பாளர் நியமனத்தில் உடன்பாடு இல்லை என்ற பேச்சுக்கே இடமில்லை, ஏனென்றால் முன்மொழியப்பட்ட வேட்பாளர்களில் அமிருடினும் ஒருவராவார்.

அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்யப்பட்டு விட்டது. ஆகவே, நாம் தற்போதைய ஆட்சிக்குழு உறுப்பினர்களுடன் மாநில அரசு செயல்படுவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று வான் அசிஸா இன்று புத்ரா ஜெயாவில் அவரது அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.