யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்குவது நாட்டுக்கு அச்சுறுத்தல் அல்ல: எரான் விக்ரமரட்ண

“யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு நட்டஈடு வழங்குவது நாட்டுக்கு அச்சுறுத்தல் அல்ல. அது கட்டாயம் செய்யப்பட வேண்டிய விடயமாகும்.” என்று இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரட்ண தெரிவித்துள்ளார்.

இன, மத, மொழி பேதமன்றி காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் தகவல்களை வழங்குவதற்காக ஆணைக்குழு அமைக்கப்பட்டமை தவாறானதா? என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

வரவு -செலவுத் திட்டத்தில் நிதி அமைச்சுக்கான ஒதுக்கீட்டு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே எரான் விக்ரமரட்ண மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “2015ஆம் ஆண்டு ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 பிரேரணை பற்றி பலரும் கருத்துக்களை முன்வைக்கின்றனர். அதில் உள்ள விடயங்கள் என்ன? காணாமல் போனோர் அலுவலகத்தை அமைத்தமை தவறானதா?. இன, மத, மொழி பேதமின்றி சகல குடும்பங்களுக்கும் தமது காணாமல் போன அன்பானவர்கள் பற்றிய தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்காக இந்த அலுவலகம் செயற்படுகிறது. தமிழர்கள் காணாமல் போவதற்கு முன்னர் சிங்களவர்கள் காணாமல் போனார்கள். இந்த நிலைமைக்கு எமது இரண்டு பிரதான கட்சிகளும் பொறுப்புக்கூற வேண்டும். இழப்பீட்டு அலுவலகத்தை பாராளுமன்ற அனுமதியைப் பெற்று அரசியலமைப்புக்கு உட்பட்டு அமைத்துள்ளோம். யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களை கௌரவமாக வாழச் செய்வதற்கும் அவர்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கும் உதவும் நோக்கிலேயே இந்த அலுவலகம் அமைக்கப்படவுள்ளது. இதனை நாட்டுக்கு அச்சுறுத்தலாகப் பார்க்கக் கூடாது. இதனை நாம் கட்டாயமாக முன்னெடுக்க வேண்டும்.

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அமைக்கப்பட வேண்டும் என்பது குறித்த அமைச்சரவைப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதேநேரம், நீதிக் கட்டமைப்புப் பற்றிக் கூறுகின்றனர். 30/1 பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ள நீதிப் பொறிமுறை தொடர்பில் பிழையாக அர்த்தம் கற்பிக்கப்படுகிறது. சர்வதேச நிபுணர்களின் ஒத்துழைப்புக்களுடன் கூடிய நீதிப் பொறிமுறையொன்று பற்றியே அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையின் நீதிப் பொறிமுறையில் வெளிநாட்டு பிரதிநிதிகளின் பங்களிப்பு மட்டுப்படுத்தப்பட்டதாகும்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளிநாட்டு சுயாதீன நிபுணர்களைக் கொண்ட குழுவொன்றை அமைத்திருந்தார். அதில் இந்தியாவின் முன்னாள் பிரதம நீதியரசர் பகவதி பங்கெடுத்திருந்தார். அது மாத்திரமன்றி எமது நீதிபதிகள் பலர் வெளிநாடுகளில் சேவை வழங்கி வருகின்றனர். இது போன்றே இலங்கைப் பொறிமுறையில் சர்வதேச நிபுணர்களின் பங்களிப்பு பற்றியே பிரேரணையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு முன்னர் அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் நாட்டை ஸ்திரப்படுத்துவது அவசியமாகும்.” என்றுள்ளார்.

-4tamilmedia.com

TAGS: