இரானின் புரட்சிகர பாதுகாப்புப் படையை பயங்கரவாத அமைப்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
மற்றொரு நாட்டின் ராணுவத்தை அமெரிக்கா பயங்கரவாத இயக்கமாக அறிவிப்பது இதுவே முதல் முறை.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், மத்திய கிழக்கு பகுதியில் செயல்படும் அமெரிக்க ராணுவத்தை இரான் பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளதாக அந்நாட்டின் அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இரானின் சர்வதேச அணு ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகுவதாக டிரம்ப் அறிவித்தது முதல் இவ்விருநாடுகளுக்கிடையே பதற்றம் அதிகரித்துள்ளது.
இரானின் பாதுகாப்புப் படையையே பயங்கரவாத இயக்கமாக அறிவித்ததன் மூலம், அந்நாட்டின் மீது அமெரிக்காவால் மேலதிக தடைகளை விதிக்க முடியும். இதன் காரணமாக இரானின் தொழில்துறை பாதிப்புக்குள்ளாகும் சூழல் உருவாகியுள்ளது.
ஏற்கனவே, இரானின் புரட்சிகர பாதுகாப்புப் படையும் அதோடு தொடர்புடைய மற்ற சில அமைப்புகளும் அணுஆயுத பரவல், பயங்கரவாத ஆதரவு மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக எழுந்த குற்றச்சாட்டின் காரணமாக அவற்றின் மீது அமெரிக்கா பல்வேறு தடைகளையும் விதித்துள்ளது.
டிரம்ப் என்ன சொன்னார்?

“இரான் அரசாங்கம் பயங்கரவாதத்தை ஆதரிப்பது மட்டுமின்றி அதன் புரட்சிகர பாதுகாப்புப் படை பயங்கரவாத செயல்பாடுகளில் பங்கேற்பதுடன் அதற்கு நிதியுதவி அளித்து, அதை அரசாங்கத்தின் செயல்பாட்டு கருவியாக ஊக்குவிப்பதை அமெரிக்க அரசு உறுதி செய்கிறது” என்று இதுகுறித்த அறிவிப்பின்போது டொனால்டு டிரம்ப் கூறினார்.
இரான் மீதான அழுத்தத்தை “கணிசமான அளவில் அதிகரிக்கும் வகையில்” இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.
“நீங்கள் இரானின் புரட்சிகர பாதுகாப்புப் படையோடு தொழில் செய்கிறீர்கள் எனில் அது பயங்கரவாததிற்கு நிதியுதவி செய்வதற்கு சமம்” என்று டிரம்ப் தெரிவித்தார்.
டிரம்பின் அறிவிப்பு இன்னும் ஒரு வாரகாலத்தில் நடைமுறைக்கு வருமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. -BBC_Tamil

























