மோசமான காலக்கட்டத்தில் நிதி அமைச்சர் ஆவதை அன்வார் விரும்பவில்லை

பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம், பொருளாதார நிலை மோசமாக உள்ள காலக்கட்டத்தில் நிதி அமைச்சர் பொறுப்பை ஏற்கத் தயாராக இல்லை.

இதை அவரே தெரிவித்தார். அன்வார், இன்று அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தில் அபுசுலைமான் அறநிதியைத் தொடக்கி வைத்தார்.

“இப்போது என்னிடம் நிதி அமைச்சைக் கொடுத்தால், ஏற்க மாட்டேன். ஏனென்றால் இப்போது முன்னைப் போல் இல்லை.. அப்போது நிறைய பணம் இருந்தது.

“மொத்த உள்நாட்டு உற்பத்தி 10 விழுக்காடாக இருந்தது. இப்போதுபோல் 4.5 விழுக்காடு அல்ல”, என அன்வார் அவரது உரையில் கூறினார்.

நிதி ஒதுக்கச் சொல்லிக் கேட்டால், அரசாங்கம் பரிசீலிக்கும் என்று கூறுவதே நிதி அமைச்சர் லிம் குவான் எங்-குக்கு வழக்கமாகிவிட்டது என போர்ட் டிக்சன் எம்பி ஆன அன்வார் கூறினார்.

“அவரிடமிருந்து வரும் பதில் ‘ஆகட்டும் பார்ப்போம்’, ‘இப்போது முடியாது பிறகு பார்ப்போம்’ என்றுதான் இருக்கும். ஏனென்றால், நிதி நெருக்கடி, அதுதான் காரணம்”, என்றவர் சொன்னார்.

அன்வார் 1991-இலிருந்து 1998வரை நிதி அமைச்சராக இருந்திருக்கிறார். அது ஆசிய நிதி நெருக்கடியால் மலேசியா பாதிக்கப்பட்டிருந்த காலம்.