14 ஓராங் அஸ்லிகள் இறந்த கிராமம் தனித்து வைக்கப்பட்டது

குவா மூசாங், கோலா கோ-வில் 14 ஓராங் அஸ்லிகள் மரணமுற்ற ஒரு கிராமம் சுற்றி வளைக்கப்பட்டுத் தனித்து வைக்கப்படும் என கிளந்தான் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

இன்று சுகாதார அமைச்சர் சுல்கிப்ளி அஹமட்டுடன் சேர்ந்து நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் கிளந்தான் சுகாதாரத் துறை இயக்குனர் டாக்டர் ஸைனி உசேன், நோய் பரவாதிருக்க அக்கிராமம் சுற்றி வளைக்கப்பட்டிருக்கும் என்றார். அதாவது யாரும் கிராமத்துக்குள் செல்ல முடியாது, அங்கிருப்போர் வெளியில் வர முடியாது.

“அதைப் பார்க்கையில் மூச்சுக்குழாய்த் தொற்றுபோலவும் விரைந்து பரவும் தன்மை கொண்டதுபோலவும் தெரிகிறது.

“எனவே, அநோய் பரவுவதை நாங்கள் விரும்பவில்லை, அதனால் அப்பகுதியில் (மக்கள்) நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தி வைக்க வேண்டியுள்ளது”, என்று ஸைனி தெரிவித்தார்.

அது குறித்து விவரித்த சுகாதார அமைச்சர் சுல்கிப்ளி, நோய் பரவியுள்ள கிராமம் தனித்து வைக்கப்படும் என்றார்.

குவா மூசாங் மருத்துவ மனை சென்று வந்த அவர், ஓராங் அஸ்லி மக்களின் இறப்புக்கான துல்லிதமான காரணம் இதுவரை தெரியவில்லை என்றார்.