“முன்னெப்போதும் இல்லாத பலத்த சவாலை நாம் இன்று எதிர்கொண்டுள்ளோம். இது கஷ்டம் என்று கைவிட்டுவிட்டு நாங்கள் ஓடிவிட முடியாது. நிச்சயமாக இந்தச் சவாலுக்கு முகம் கொடுத்து தமிழ் மக்களின் இலக்கை நாம் அடைந்தே தீருவோம்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
ஆழியவளையில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
எம்.ஏ.சுமந்திரன் மேலும் கூறியுள்ளதாவது, “தமிழ் மக்களின் அரசியல் பயணத்திலே பல வித்தியாசமான தசாப்தங்களைக் கடந்து வந்திருக்கின்றோம். ஆனால், இன்று நாங்கள் இருக்கின்ற சூழல் இதற்கு முன்னெப்போதும் இல்லாத சூழல்.
எங்களுக்கு உகந்த ஒரு சூழலை நாம் உருவாக்கி விட்டோம் என்று நினைத்திருந்தபோது, அந்தச் சூழலே எங்களுக்கு மாறானதாகவும், நாங்கள் சறுக்கி விழக்கூடியதாகவும், விழுந்தால் பாரிய காயம் ஏற்படக்கூடியதாகவும் இன்று எங்கள் முன்னால் இருந்து கொண்டிருக்கின்றது.
மிக நிதானமாக, மிக கவனமாக நாங்கள் எங்களது மக்களது நலன்களை முன்னிறுத்தி முன்னேற வேண்டிய காலமாக இருக்கின்றது. விசேடமாக இந்த வருடத்தில் இவை எல்லாவற்றையும் சீர்தூக்கி ஆராய வேண்டும். எமது நீண்டகால இலக்குகளை அடைவதற்கான வழிகள் என்ன? பொதுமக்களினது நலன்களை அடைவதில் அவர்களுக்கு எப்படித் தலைமைத்துவம் கொடுக்க முடியும்? என்பது குறித்து சிந்தித்துச் செயலாற்ற வேண்டிய காலமாக இது இருக்கின்றது.
இது இலகுவான ஒரு சவால் அல்ல. முன்னெப்போதும் இல்லாத பலத்த சவால். இது கஷ்டம் என்று கைவிட்டுவிட்டு நாங்கள் ஓடிவிட முடியாது. நிச்சயமாக முகம் கொடுக்க வேண்டிய ஒரு சவாலாக இது இருக்கின்றது. எனவே, இந்தச் சவாலுக்கு முகம் கொடுத்து தமிழ் மக்களின் இலக்கை நாம் அடைந்தே தீருவோம்.” என்றுள்ளார்.
-4tamilmedia.com