கொரோனா வைரஸ்: இலங்கையின் 48 மணிநேரத்தில் கட்டப்படும் மருத்துவமனை

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து இலங்கையர்களை பாதுகாக்கும் நோக்குடன் இலங்கை ராணுவத்தினால் 48 மணி நேரத்தில் மருத்துவமனை ஒன்றைக் கட்டி முடிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குறிப்பாக சீனாவின் வுஹான் மாகாணத்தில் வாழும் இலங்கை மாணவர்களை நாட்டிற்கு அழைத்து வந்து சிகிச்சைகள் மற்றும் பரிசோதனைகளை வழங்கும் நோக்குடனேயே இந்த மருத்துவமனை நிர்மாணிக்கப்பட்டு வருவதாக ராணுவ ஊடகப் பேச்சாளர் பிடிகேடியர் சந்தன விக்ரமசிங்க பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

சீனாவிலிருந்து வருகை தருவோருக்கு உரிய சிகிச்சைகளை வழங்க இலங்கை ராணுவம் தயார் நிலையிலேயே உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவர் குளிர்மைப்படுத்தப்பட்ட அதிதீவிர சிகிச்சை அறையில் 14 நாட்கள் வைத்திருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில், தியத்தலாவை பகுதி குளிரான பகுதி என்பதனாலேயே அந்த பகுதியை தெரிவு செய்து, இந்த கட்டடத் தொகுதியை நிர்மாணித்து வருவதாகவும் அவர் கூறினார்.

தியத்தலாவை பகுதியில் இரண்டு கட்டடங்கள் அமைக்கப்படுவதுடன், அவற்றில் 32 அறைகள் நிர்மாணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

வுஹான் மாகாணத்தில் தற்போது 32 இலங்கையர்களே தங்கியுள்ளதாகவும், அவர்களுக்கு சிகிச்சைகளை வழங்கும் நோக்குடனேயே 32 அறைகளை கொண்ட இந்த மருத்துவமனை நிர்மாணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கொரோனா வைரஸிடமிருந்து இலங்கையர்களை பாதுகாத்துக்கொள்ள இலங்கை ராணுவம் 24 மணித்தியாலங்களும் தயார் நிலையில் உள்ளதாக ராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

குறிப்பாக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இலங்கை ராணுவம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து பயணிகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் மிகக் குறுகிய காலத்தில் இவ்வாறான மருத்துவமனை ஒன்றை நிர்மாணிக்கும் முதலாவது முயற்சி இதுவாகும்.

கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளான சீனப் பெண்ணொருவர் இலங்கையில் கடந்த 27ஆம் தேதி அடையாளம் காணப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து அவருக்கு சிகிச்சைகள் உரிய முறையில் அளிக்கப்பட்டதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்திருந்தனர்.

குறித்த பெண் பூரண குணமடைந்துள்ளதாகவும், அவர் தொடர்ந்தும் அங்கொடை தொற்று நோய் மருத்துவமனையில் தங்க வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வு பிரிவின் பணிப்பாளர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

அத்துடன், கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் ஒன்பது நோயாளர்கள் அங்கொடை தொற்று நோய் மருத்துவமனையில் தங்க வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.