சுதந்திர தினத்தை முன்னிட்டு சமய வழிபாட்டு நிகழ்வுகள்

72ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து சமய வழிபாட்டு நிகழ்வுகளும் நாளை (04) காலை இடம்பெறவுள்ளன.

காலை 6.30 மணிக்கு கொழும்பு பொல்வத்த தம்மகிதாராமயவில் பௌத்த சமய வழிபாட்டு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

இலங்கை ராமஞ்ஞ மஹாநிக்காயவின் மஹாநாயக்கர் சங்கைக்குரிய நாபான பேமசிறி தேரரின் அனுசாசனத்துக்கு அமைய இவ் வழிபாட்டு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

பௌத்த அலுவல்கள் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த வழிபாட்டு நிகழ்வுகளில் ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்து சமய வழிபாட்டு நிகழ்வுகள்  காலை 6.30 மணிக்கு கொழும்பு 6 இல் அமைந்துள்ள மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் இடம்பெறும்.

அமைச்சர்களான டக்ளஸ் தேவானாந்தா, ஆறுமுகன் தொண்டமான் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொள்ள உள்ளனர்.

கத்தோலிக்க சமய வழிபாட்டு நிகழ்வுகள் பம்பலப்பிட்டி புனித மரியாள் தேவாலயத்தில் அருட்தந்தை பிலிசியன் தலைமையில் காலை 6.15 மணிக்கு இடம்பெறும்.

இந்நிகழ்வில் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

கிறிஸ்தவ சமய வழிபாட்டு நிகழ்வுகள் கொழும்பு 3 இல் உள்ள பஹதலே பெப்ரிஸ்ட் தேவாலயத்தில் அருட்தந்தை கயான் குணசேகர தலைமையில் நாளை காலை 6.15 மணிக்கு இடம்பெறும். நாடாளுமன்ற உறுப்பினர் ஹெரான் விக்ரமரத்ன இதில் கலந்து கொள்ள உள்ளார்.

இஸ்லாமிய மத வழிபாட்டு நிகழ்வுகள் நாளையதினம் காலை 6.25 மணிக்கு கொழும்பு 03 இல் உள்ள கொள்ளுப்பிட்டி சென்.மைக்கல் வீதியில் உள்ள ஜும்மா பள்ளிவாசலில் இடம்பெறும். இந் நிகழ்வில் வடமேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸம்மில் கலந்து கொள்ளவுள்ளார்.

அமரர் டி.எஸ்.சேனாநாயக்கவின் உருவச்சிலைக்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வு சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் சுதந்திர சதுக்கத்தில் உள்ள உருவச்சிலைக்கு அருகாமையில் இடம்பெறவுள்ளது.

இதேவேளை கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நேற்றிரவு 9.30 மணிக்கு முழு இரவு தர்ம போதனைகள் ஆரம்பமாகியுள்ளன.

ஸ்ரீ லங்கா அமரபுர மஹா சங்க சபையின் மஹாநாயக்கர் சங்கைக்குரிய கொட்டுகொட தம்மாவாச தேரரின் அனுசாசனத்துக்கு அமைய பௌத்தாலோக மாவத்தை அத்துல தஸ்ஸன பௌத்த மஹாவிஹாரை உள்ளிட்ட பல விஹாரைகளின் விஹாராதிபதிகள ஸ்ரீலங்கா அமரபுர மஹாநிக்காயவின் ஸ்ரீ சத்தம்மவங்ச அனுநாயக்கர் உள்ளிட்ட பலரின் வழிகாட்டலில் தர்மபோதனைகள் இடம்பெற்றன.

இந்த நிகழ்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, சபாநாயகர் கரு ஜயசூரிய, அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் உள்ளிட்ட அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.