ஜெர்மனி காற்பந்தாட்ட அணிவகுப்பில் தமிழீழத் தேசியக் கொடி

ஜெர்மனியின் மிகப் பிரபல்யம் வாய்ந்த ‘வெஸ்ட்பேலன்’ திடலில் இலங்கை, பிரேசில், ஜப்பான் மற்றும் 40 உலக நாடுகளின் கொடிகளின் மத்தியில் தமிழீழத் தேசிய கொடியும் அணிவகுப்பிற்காக கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை சுமார் 80,000 மக்கள் அமர்ந்திருந்த ஜெர்மனியின் ‘வெஸ்ட்பேலன் ஸ்டேடியன்’ திடலில் நடைபெற்ற காற்பந்தாட்ட போட்டி ஆரம்ப அணிவகுப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியக் கொடி இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை ‘பொறுஜியா டொட்மென்ட்’ மற்றும் ‘எப்சீ நியூரம்பேர்க்’ அணிகளுக்கிடையிலான காற்பந்தாட்டப் போட்டியை முன்னிட்டு நடைபெற்ற அணிவகுப்பில் உலக நாடுகளின் தேசியக் கொடிகள் கொண்டு செல்லப்பட்டதைப் போன்று தமிழீழத் தேசியக் கொடியும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

தமிழ் இளையோர் அமைப்பும் ‘பொறுஷியா டொட்மென்ட்’ ரசிகர்கள் அமைப்பும் ஒன்றிணைந்தே இந்த தமிழீழத் தேசியக் கொடியினை அணிவகுப்பின் போது கொண்டு சென்றுள்ளனர்.

இந்த காற்பந்தாட்ட அணிவகுப்பின்போது இலங்கை தேசியக் கொடி கொண்டுசெல்லப்பட்ட அதேசமயம் அதற்கு இணையாக முன் வரிசையில் தமிழீழ தேசியக் கொடி செல்லப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.