இந்நாட்டில் உள்ள தமிழ் மற்றும் சீனப் பள்ளிகளின் எதிர்காலம் குறித்து நாடாளுமன்றம்தான் முடிவு செய்ய வேண்டுமேத் தவிர நீதிமன்றம் அல்ல என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது நாட்டின அரசியலமைப்பு சம்பந்தப்பட்ட விசயமென்பதால் நாடாளுமன்றத்தால் மட்டுமே இதனை தீர்மானிக்க முடியும் என தலைசிறந்த வழக்கறிஞர்களில் ஒருவரும் முன்னாள் நீதிபதியுமான கோபால் ஸ்ரீராம் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.
தமிழ், சீனப் பள்ளிகளின் தோற்றம் மற்றும் அவற்றின் செயல்பாடுகள் நம் நாட்டின் நாடாளுமன்றத்தில் வகுக்கப்பட்ட ஒரு கொள்கை. எனவே அது குறித்து தீர்மானிப்பதற்கு நீதிமன்றத்திற்கு உரிமை இல்லை என்றார் அவர்.
தமிழ், சீனப்பள்ளிகள் நம் நாட்டில் சட்டவிரோதமாக இயங்குகின்றன என தீபகற்ப மலேசிய மலாய் மாணவர்கள் சங்கங்களின் சம்மேளனம், இஸ்லாமிய கல்வி மேம்பாட்டு மன்றம் மற்றும் மலேசிய எழுத்தாளர் சங்கங்களின் சம்மேளனம், ஆகிய 3 மலாய் இயக்கங்களும் அரசாங்கத்திற்கு எதிராக கடந்த ஆண்டில் கூட்டாக வழக்குத் தொடுத்தன.
தமிழ் மற்றும் சீனத் தாய்மொழிப் பள்ளிகளில் போதனா மொழியாக மலாய் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் அந்த இயக்கங்கள் தங்களது வழக்கு மனுவில் தெரிவித்துள்ளன.
தமிழ், சீன மொழிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மலாய் மொழியில் போதுமானத் தேர்ச்சி பெறுவதில்லை என்றும், அதனால் அரசாங்கத்திலோ தனியார் துறையிலோ அவர்கள் குறைவான வேலை வாய்ப்புகளை மட்டுமே பெற முடிகிறது எனவும் அம்மூன்று இயக்கங்களின் சார்பாக ஆஜராகும் வழக்கறிஞர் முஹமட் ஹனிஃப் வாதிட்டார்.
அந்தக் கூற்று உண்மையென்றால் வழக்கைத் தொடுத்துள்ள அந்த மூன்று அமைப்புகளுக்கும் ஏற்படக்கூடிய இழப்புகளும் பாதிப்புகளும் என்ன என்று கோபால் ஸ்ரீராம் கேள்வி எழுப்பினார். அது குறித்து அவ்வியக்கங்கள் தெளிவாக சுட்டிக்காட்டவில்லை என அவர் தொடர்ந்து வாதிட்டார்.
எனவே ‘லோக்கஸ் ஸ்தாண்டி’ எனப்படும் வழக்குரிமை அவர்களுக்கு இல்லாத நிலையில் இவ்வழக்கு ஒட்டு மொத்தமாகத் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என தங்களுடையப் பள்ளிகளை தற்காப்பதற்கு போராடி வரும் தமிழ், சீன அமைப்புகளின் சார்பாக ஆஜராகும் கோபால் ஸ்ரீராம் நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டார்.
இந்நாட்டில் தமிழ், சீனத் தாய்மொழிப் பள்ளிகள் இருப்பதால் சட்ட அத்து மீறல்கள் ஏற்பட்டு தங்களை அது பாதித்துள்ளது என வழக்கைத் தொடுத்துள்ள வாதிகள் நிரூபிக்கத் தவறிவிட்டனர் என்றார் அவர்.
இந்த வழக்கில் அரசாங்கத்தின் சார்பில் வாதத் தொகுப்பு செய்த உயர்நிலை வழக்கறிஞரான நற்குணவதி, மலேசியாவில் தாய்மொழிப் பள்ளிகள் நாட்டின் கல்வி அமைப்பின் ஒரு பகுதி என்றும் அரசியலமைப்புச் சட்டத்தை ஒருபோதும் அது மீறவில்லை என்றும் குறிப்பிட்டார்.
இவ்வழக்கில் மலேசிய தமிழர் இயக்கம், பேராக் மாநில தமிழர் திருநாள் இயக்கம், ஓய்வு பெற்ற தமிழாசிரியர்கள் நலனபிவிருத்தி சங்கம், மலேசிய தமிழ் நெறிக் கழகம், மலேசிய முன்னாள் தமிழ் பள்ளி மாணவர்கள் சங்கம், ம.சீ.ச., ம.இ.கா., கெராக்கான், மலேசிய பூமிபுத்ரா கட்சி ஆகியவற்றோடு 3 சீன இயக்கங்களும் தற்காப்புத் தரப்போடு தங்களை இணைத்துக்கொண்டுள்ளன.
வழக்கின் தீர்ப்பு அடுத்த மாதம் 29ஆம் தேதி (29.12.2021) வழங்கப்படும்.