ரஞ்சன் அருண் பிரசாத்
இலங்கையின் கல்வி சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாட்டு ராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, பதவி நீக்கப்பட்டுள்ளார்.
உடன் அமுலுக்கு வரும் வகையில், அவர் பதவி நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறுகின்றது.
அரசாங்கத்தின் நடவடிக்கைகளை சுசில் பிரேமஜயந்த, அண்மை காலத்தில் விமர்சித்திருந்தார்.
செய்ய முடியாததை செய்ய முயற்சித்தமையினாலேயே, முழு நாடும் கஷ்டத்தில் உள்ளதாக அவர் அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார்.
உரம் இல்லாமல், விவசாயிகள் எவ்வாறு விளைச்சலை பெற்றுக்கொள்வார்கள் எனவும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
மரக்கறி உள்ளிட்ட பொருட்களின் விலைகளை முன்னதாகவே திட்டமிட்டு கட்டுப்படுத்தியிருக்க வேண்டும் எனவும், பொருட்களின் விலையேற்றத்திற்கான பொறுப்பை, தீர்மானம் மேற்கொண்டவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியிருந்தார்.
அத்துடன், விவசாய அமைச்சர் தனது பொறுப்பில் தோல்வி கண்டுள்ளதாகவும் அவர் விமர்சனம் முன்வைத்திருந்தார்.
தற்போது ஆட்சியிலுள்ளது தமது அரசாங்கம் என்ற போதிலும், தன்னை தீர்மானம் எடுக்கும் இடத்தில் வைக்கவில்லை என அவர் குறிப்பிட்டிருந்தார்.
சரியான தீர்மானங்களை எடுக்க வேண்டிய காலம் இருந்தாக கூறிய அவர், தற்போது அந்த காலம் கடந்து விட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
அரசாங்கத்தை விமர்சனம் செய்யும் வகையில், சுசில் பிரேமஜயந்த கருத்து வெளியிட்டு, ஓரிரு தினங்களில் ஜனாதிபதியினால் அவர் பதவி விலக்கப்பட்டுள்ளார்.