இரண்டு வயதில் உலக சாதனை படைத்த இலங்கை சிறுமி!!

அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை அல் மினன் வீதி, ஸர்ஜுன் அக்மல் – பாத்திமா நுஸ்ஹா தம்பதிகளின் மகளான மின்ஹத் லமி தனது இரண்டரை வயதில் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடுத்துள்ளார்.

120 உலக நாடுகளின் தலைநகரங்களை இரண்டு நிமிடத்தில் மிக வேகமாகக் கூறி அவர் உலக சாதனைப் புத்தகத்தில் தனது பெயரை பதிவு செய்துள்ளார்.

உலக சாதனைப் புத்தகத்தில் இச் சிறுமியின் பெயரை பதிவு செய்து சாதனைச் சிறுமியாக தமது இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளது.

இவருக்கான இலச்சினை, பதக்கம், மற்றும் சான்றிதழ் என்பவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது இரண்டு வயதில் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த மின்ஹத் லமி மருதமுனை வரலாற்றில் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த முதலாவது சாதனை சிறுமியாவார்.

இந்த வரலாற்று சாதனையை நிகழ்த்திய சிறுமியை பிரதேச மக்கள் பலரும் பாராட்டி வருகின்றார்கள்.

இச்சிறுமி எதிர்காலத்தில் கல்வித் துறையிலும், ஏனைய துறைகளிலும் மென்மேலும் பல சாதனைகளைப் பெற்று எதிர்காலத்தில் நாட்டிற்கு பெருமையை தேடித் தரக் கூடிய ஒருவராக மிளிர வேண்டும் என்று பலரும் வாழ்த்துகின்றனர்.

வேறு திறமைகள்

இச்சிறுமி தனது பெற்றோர் சொல்லிக் கொடுப்பதை கவனமாகச் செவிமடுத்து மனனம் செய்வதுடன், ஞாபகத்திலும் வைத்துக் கொள்வார்.

இவர் எதாவது ஒரு பொருளையோ, ஒரு இடத்தையோ அவதானித்தவுடன் அது பற்றி அறிந்து கொள்ள அதிக ஆர்வம் காட்டக் கூடியவர். அதனை அறிந்து கொண்டு சில நாட்களுக்கு பின்னர் அப்பொருள் பற்றியோ அவ்விடம் பற்றியோ தானாகவே சொல்லக் கூடிய திறமை அவரிடம் உண்டு.

இவர் 300 இற்கு மேற்பட்ட தமிழ்ச் சொற்களுக்கான ஆங்கிலச் சொற்களை தெளிவாக சொல்லக் கூடிய திறமையுள்ளவர். தமிழ் அகரவரிசையிலுள்ள 247 எழுத்துகளையும் மிக வேகமாக சொல்லக் கூடியவர்.

அத்துடன் மாதங்கள், வாரங்கள், நிறங்கள், பழங்கள், வடிவங்கள், உடல் உறுப்புகளின் பகுதிகள், பறவைகள், இலக்கங்கள், ஆங்கில எழுத்துக்கள் மற்றும் அதற்கான சொற்களையும் ஒழுங்குவரிசையாகவும், வரிசை இல்லாமலும் மிக வேகமாக சொல்லக் கூடிய திறமை இவரிடம் உண்டு.

இவை தவிர பொதுஅறிவு உள்ளிட்ட விடயங்கள், 100 இஸ்லாமிய கேள்விகளுக்கான பதில்களை சொல்லக் கூடியவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

 

 

IBC Tamil