உலகளாவிய நெருக்கடிகளால் இலங்கை உட்பட 54 நாடுகளுக்கு கடன் நிவாரணம் தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த நாடுகளின் செயலற்ற தன்மையின் அபாயங்கள் பயங்கரமானவையாக இருக்கும் எனவும் ஐ.நாவின் அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் வறுமை நிலை மேலும் மோசமடையும் என்பதுடன், காலநிலை மாற்றம் மற்றும் அதன் தீவிரத்தன்மையை குறைப்பதற்கான முதலீடுகள் மேற்கொள்ளப்படாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உலகில் காலநிலையால் மிகவும் பாதிக்கப்படக் கூடிய நாடுகளாக இலங்கையும் இருக்கின்றமை கரிசனை அளிக்கும் ஒன்றாக உள்ளதாகவும் ஐ.நா குறிப்பிட்டுள்ளது.
அபிவிருத்தி நெருக்கடியின் அபாயம்
இது தொடர்பில் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் வொஷிங்டனில் நடைபெற்ற G 20 நாடுகளின் நிதி அமைச்சர்களின் கூட்டங்களுக்கு முன்னதாக வெளியிட்ட அறிக்கையில் ஐ.நா வலியுறுத்தியுள்ளது.
தொடர்ச்சியான எச்சரிக்கைகள் விடுக்கப்பட்ட போதிலும் இதுவரை சிறிய அளவான விடயங்களே இடம்பெற்றுள்ள எனவும் அபாயங்கள் அதிகரித்துவருவதாகவும் ஜெனீவாவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஐ.நா அபிவிருத்தி திட்டத்தின் தலைவர் அஹ்கிம் ஸ்ரெய்னர் கூறியுள்ளார்.
இந்த நெருக்கடியானது தீவிரமடைந்துவருவதுடன், உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் ஒரு வேரூன்றிய அபிவிருத்தி நெருக்கடியின் அபாயத்தை ஏற்படுத்தும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
ஒன்றிணைந்து வரும் பொருளாதார அழுத்தங்களை ஏழை, கடனாளி நாடுகள் எதிர்கொள்கின்றன எனவும் மேலும் பலர் தமது கடனைத் திருப்பிச் செலுத்தவோ அல்லது புதிய நிதியுதவியை அணுகவோ முடியாத நிலைமை ஏற்படும் எனவும் ஐ.நாவின் அபிவிருத்தி திட்டம் கூறியுள்ளது.
ஒருங்கிணைந்த நிதி மற்றும் பணச் சுருக்கம், குறைந்த வளர்ச்சி ஆகியன உலகளாவிய ரீதியில் ஏற்ற இறக்கங்களை தூண்டுவதால் சந்தை நிலைமைகள் வேகமாக மாறிவருகின்றன என அஹ்கிம் ஸ்ரெய்னர் குறிப்பிட்டுள்ளார்.
கடன் அதிகரிப்பு
கொரோனா தொற்று பரவலுக்கு முன்னதாக பாதிக்கப்பட்ட பல நாடுகளில் கடன் பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த தசாப்தத்தில் துரிதமான கடன் அதிகரிப்பு தொடர்ந்து குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது எனவும் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டம் குறிப்பிட்டுள்ளது.
தற்போதுள்ள தரவுகளின் அடிப்படையில் 54 நாடுகளில் 46 நாடுகளின் பொதுக்கடனானது கடந்த 2020 ஆம் ஆண்டு 782 பில்லியன் டொலராக காணப்பட்டதாகவும் திட்டத்தின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-ibc