சிறிலங்கா கடற்படையினரின் தொடர் கைது – இராமேஸ்வரத்தில் தொடர் போராட்டத்திற்கு முனைப்பு

சிறிலங்கா கடற்படையினரின் தொடர் கைது நடவடிக்கையை கண்டித்து இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் புகையிரத மறியல் உள்ளிட்ட தொடர்போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று ஞாயிற்றுக்கிழமை(6) மதியம் இடம்பெற்ற கலந்துரையாடலில் இது தொடர்பில் பல்வேறு தீர்மானங்களை அவர்கள் முன் வைத்துள்ளனர்.

சிறிலங்கா கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களையும் படகுகளையும் உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளனர்.

வேலை நிறுத்தப் போராட்டம்

எதிர்வரும் 8 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும், 21 ஆம் திகதிக்குள் மீனவப் பிரதிநிதிகள் தமிழக முதல்வரைச் சந்திக்க அனுமதி வழங்க வேண்டும் எனக் கோரியும், தமிழக அரசின் துணையோடு மீனவ அமைப்புகள் வெளியுறவுத்துறை அமைச்சரை நேரில் சந்திக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரியுள்ளனர்.

தவறும் பட்சத்தில் உலக மீனவர் தினமான 22ஆம் திகதி அன்று புகையிரத மறியல் போராட்டம் மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள மீனவர்களை ஒருங்கிணைத்து மாநிலம் தழுவிய தொடர் போராட்டங்களை நடத்தவுள்ளதாக இராமேஸ்வரத்தில் நடந்த கடற்றொழிலாளர்களின் அவசர ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

-ibc