மணிலா அனைத்துலக விமான நிலையத்தில் மின்தடை – 270 விமானச் சேவைகள் ரத்து

பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள நினோய் அக்கினோ அனைத்துலக விமான நிலையத்தில் மின்தடை, தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மணிலாவிற்குச் செல்லவிருந்த அல்லது அங்கிருந்து புறப்படவிருந்த சுமார் 270 விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

இன்று அதிகாலை பயணிகள் சிரமங்களை எதிர்கொள்ளத் தொடங்கினர். சில விமானச் சேவைகளின் நேரம் எப்போது வேண்டுமானாலும்  மாறலாம் என நள்ளிரவுக்குக் கால் மணி நேரத்துக்குப் பிறகு விமான நிலையம் தனது Facebook பக்கத்தில் தெரிவித்திருந்தது.

பிறகு விமானப் போக்குவரத்து நிர்வாக அமைப்புகளில் தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டதாக அது குறிப்பிட்டது. செயல்பாடுகள் ஓரளவு வழக்கநிலைக்குத் திரும்பிவிட்டதாக மாலை 4 மணிக்குத் தெரிவிக்கப்பட்டது.

பிலிப்பீன்ஸ் விமானப் போக்குவரத்து நிர்வாக நிலையத்தில் மின்தடை ஏற்பட்டதாக Cebu Pacific விமான நிறுவனம் கூறியிருந்தது. பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு உணவுப் பொட்டலங்களும் தண்ணீரும் வழங்கப்பட்டன.

 

 

-smc