பாரிசான் மற்றும் பக்காத்தான் நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி சுமுகமாக தீர்க்கப்பட்டது

மற்றும் பக்காத்தான் ஹரப்பான் ஆகிய ஒற்றுமை அரசாங்கக் கூட்டணிக் கட்சிகளின் உயர்மட்டத் தலைவர்களுக்கு இடையே நேற்று நடைபெற்ற சந்திப்பைத் தொடர்ந்து, நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி சுமுகமாக முடிவுக்கு வந்துள்ளதாக அரசாங்க செய்தித் தொடர்பாளர் பாமி பாட்சில் அறிவித்துள்ளார்.

கூட்டணித் தலைவர்களுக்கு இடையிலான இந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு இப்பிரச்சினை “தீர்க்கப்பட்டுவிட்டது” என்று அமைச்சரவைக்குத் தெரிவிக்கப்பட்டதாக பாமி கூறினார்.

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கம், மந்திரி பெசார் அமினுடின் ஹருன் தலைமையில் வழக்கம் போல் தொடர்ந்து செயல்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஒற்றுமை அரசாங்கக் கட்டமைப்பின் கீழ் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்களுக்கு இணங்க, இனிவரும் காலங்களில் எழும் எந்தவொரு பிரச்சினைகளும் அந்தந்தக் கட்சிகளின் மத்திய தலைமைத்துவத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று ஃபஹ்மி மேலும் தெரிவித்தார்.

பிகேஆர் கட்சியைச் சேர்ந்த அமினுடின் ஹருனுக்கு வழங்கி வந்த ஆதரவை 14 அம்னோ-தேசிய முன்னணி சட்டமன்ற உறுப்பினர்களும் மீட்டுக் கொண்டதையடுத்து, நெகிரி செம்பிலானில் இந்த அரசியல் நெருக்கடி ஏற்பட்டது.

அமினுடின் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டதாகக் கூறி, அவர்கள் தங்கள் ஆதரவை மீட்டுக் கொண்டனர்.

நெகிரி செம்பிலான் மாநிலத்தின் யாம் துவான் பெசாரை பதவியிலிருந்து நீக்க முயற்சிக்கும் நான்கு தலைவர்கள் தொடர்பான தற்போதைய நெருக்கடியுடன் தங்களின் இந்த முடிவு தொடர்புடையது என்று அந்த சட்டமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

இருப்பினும், மாநில அம்னோ கிளை தனது ஆதரவை மீட்டுக் கொண்ட போதிலும், அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்காக நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்குத் தொடர்ந்து ஆதரவு அளிப்பதாக அம்னோ தெரிவித்துள்ளது.

தங்கள் கட்சி நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்தின் ஒரு அங்கமாகவே நீடிப்பதாகவும், அமினுடினை மந்திரி பெசார் பதவியிலிருந்து மாற்றுவது குறித்து தாங்கள் ஒருபோதும் விவாதிக்கவில்லை என்றும் கட்சித் தலைவர் அஹ்மத் ஜாகித் ஹமிடி நேற்று மீண்டும் உறுதிப்படுத்தினார்.

 

 

-fmt