இந்திய கடற்தொழிலாளர்களின் வருகையை கண்டித்து மன்னாரில் போராட்டம்

வடக்கு கடற்பகுதியை இந்திய கடற்றொழிலாளர்களுக்கு குத்தகைக்கு வழங்குவதையும், இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய வருகையையும் கண்டித்து மன்னார் கடற்றொழிலாளர்களினால்  போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மன்னார் கடற்றொழில் சங்கங்களின் சமாசத்தின் ஏற்பாட்டில் மாபெரும் எதிர்ப்பு போராட்டம்  முன்னெடுக்கப்பட்டது.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கோஷங்களை எழுப்பியவாறு கடற்றொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய கடற்றொழிலாளர்களின் வருகை

‘இலங்கை கடற்பரப்பினுள் ஆயிரக் கணக்கான இந்திய கடற்றொழிலாளர்களின் இழுவை படகுகள் அத்துமீறி நுழைந்து தொடர்ச்சியாக மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றது.

அண்மையில் வெளிவிவகார அமைச்சர் இந்திய படகுகளை இலங்கை கடலில் கடற்தொழிலில் ஈடுபட அனுமதி பத்திரம் வழங்குவது தொடர்பாக இந்திய அரசாங்கத்துடன் ஆலோசிக்கப்பட்டு வருகின்றதாக நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

வடக்கு கடற்றொழிலாளர்களில் வாழ்வாதாரத்தையும், வளத்தினையும் ,வருவாயையும் பாதிக்கும் இந்திய இழுவைப் படகுகளுக்கு இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு அனுமதி பத்திரம் வழங்குதல் தொடர்பான அமைச்சரின் கருத்து உடனடியாக மீளப் பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் இது தொடர்பான ஆக்கபூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கையினையும் கடற்றொழிலாளர்கள் இதன்போது முன்வைத்தனர்.‘

மகஜர் கையளிப்பு

மேலும் வட பகுதி கடற்தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமது கோரிக்கை அடங்கிய மகஜர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு வழங்கும் வகையில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளித்துள்ளனர்.

போராட்டத்திற்கு சமூக பிரதிநிதிகள் ஆதரவு

கடற்றொழிலாளர்களின் போராட்டத்திற்கு பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும், நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ். வினோ நோகராதலிங்கம், செல்வராசா கஜேந்திரன், அருட்தந்தையர்கள் கலந்து கொண்டதோடு மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டனையும் கலந்து கொண்டிருந்தார்.

 

 

-tw