சிறுபான்மை மக்களை இலக்கு வைத்து காலத்திற்கு காலம் பயங்கரவாதத் தடைச் சட்டம் பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு

இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவது குறித்து சர்வதேச மன்னிப்புச் சபை தனது கரிசனையை வெளியிட்டுள்ளது.

பல்வேறு தரப்புக்களால் தொடர்ச்சியாக இந்த விடயம் தொடர்பில் விடுக்கப்படும் கோரிக்கைகளை அரசாங்கம் உதாசீனம் செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கின்றி நீண்ட கால தடுத்து வைப்பு

அத்துடன் வழக்கு தொடராது நீண்ட காலத்திற்கு தடுத்து வைப்பதற்காக பயங்கரவாத தடைச் சட்டம் பயன்படுத்தப்படுகிறது.

சிறுபான்மை மக்களை இலக்கு வைத்து காலத்திற்கு காலம் இந்த பயங்கரவாதத் தடைச் சட்டம் உபயோகிக்கப்படுகிறது.

இந்த நிலையில் அரசாங்கம் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமொன்றை அறிமுகம் செய்ய முனைப்பு காட்டி வருகிறது.

இந்த சட்டத்தில் கூடுதல் அடக்குமுறைகள் பிரயோகிக்கப்பட உள்ளதாகவும் சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

சட்ட நடவடிக்கை

அத்துடன் கைது செய்யப்படுவோருக்கு எதிராக சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட நியதிகளுக்கு அமைய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் அல்லது விடுவிக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளது.

மேலும் ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் சர்வதேச மனித உரிமை நியமங்களின் அடிப்படையில் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

-tw