மஇகாஉறுப்பினர்கள் PN-இல் சேருகிறார்களா? மறுக்கிறது மஇகா

கட்சியின் உறுப்பினர்களில் அதிகமானோர் விலகிப் பெரிக்காத்தான் நேசனலில் (PN) சேருகிறார்கள் என்ற கூற்றை மஇகா தலைவர் ஒருவர் நிராகரித்துள்ளார்.

மஇகா மத்திய செயற்குழு உறுப்பினர் எல்.சிவசுப்பிரமணியம், எதிர்க் கூட்டணியின் ஒரு முகநூல் பதிவில் கூறிய கூற்றை, வரவிருக்கும் மாநிலத் தேர்தலுக்கு முன்னதாக ஒரு “ஆத்திரமூட்டும், அரசியல் வேடிக்கை,” என்று அழைத்தார்.

“தேர்தல் நெருங்கிவிட்டது. மேலும் பல மஇகா உறுப்பினர்கள் கட்சியை விட்டு வெளியேறி PN இல்  சேருகிறார்கள் என்ற குற்றச்சாட்டு முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது”.

“இவை அனைத்தும் அரசியல் விளையாட்டுகள். அது (கூற்று) உண்மையாக இருந்தால், அதை நிரூபிக்குமாறு PN ஐ நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்,” என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.

பல மஇகா உறுப்பினர்கள், குறிப்பாகச் சிலாங்கூரில், கட்சியின் தலைமைமீது நம்பிக்கையை இழந்துவிட்டதாகவும், இந்திய நலனுக்காக PN-இல் சேர உள்ளதாகவும் நேற்று சிலாங்கூர் PN வெளியிட்ட முகநூல் பதிவிற்கு சிவசுப்பிரமணியம் பதிலளித்தார்.

அந்த இடுகையின்படி, பக்காத்தான் ஹராப்பான் இந்திய குரலைச் சுமப்பதில் பொருத்தமற்றதாகிவிட்டது, ஏனெனில் கூட்டணி அதன் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.

2008 இல் சிலாங்கூரில் BN வீழ்ந்ததிலிருந்து மஇகா இந்திய வாக்குகளை இழக்கத் தொடங்கியதாகவும், சமூகத்தின் ஆதரவை மீண்டும் பெற அப்போதிருந்து போராடி வருவதாகவும் அது கூறியது.

“இந்திய சமூகத்தின் விசுவாசம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதால் இது நடந்தது, இதனால் இந்தியர்கள் கூட்டணியை மாற்றினார்கள்,” என்றும் அந்தப் பதிவில் கூறியிருந்தது.