நெகிரி செம்பிலான் அரசியல் குழப்பத்திற்கு டோக் மாட் காரணமல்ல – ஜாகித்

நெகிரி செம்பிலான் நிர்வாக நெருக்கடி தொடர்பான புகார்களில் இருந்து தனது துணைத் தலைவர் முகமட் ஹசனை அம்னோ தலைவர் அகமட் ஜாகித் ஹமிடி தற்காத்துப் பேசியுள்ளார்.

நெகிரி செம்பிலான் முன்னாள் மந்திரி பெசாரும், ரந்தாவ் சட்டமன்ற உறுப்பினருமான முகமட் ஹசன், அங்கு நிலவும் சூழலைச் சீர்செய்யத் தொடர்ந்து தீர்வுகளைத் தேடி வருவதாக ஜாகித் குறிப்பிட்டார்.

எனவே, ‘டோக் மாட்’ என்று அழைக்கப்படும் முகமட் ஹசன் தான் இந்த நெருக்கடியின் பின்னணியில் உள்ள சூத்திரதாரி என்று கூறுவது நியாயமற்றது என வட்டாரங்கள் அவரி்ன் கூற்றை மேற்கோளிட்டுள்ளது.

அவர் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கான வழிகளைத் தேடி வருகிறார். எனவே, அவர் மீது இத்தகைய குற்றச்சாட்டுகளை சுமத்துவது நியாயமற்றது.

அம்னோவின் 80-வது ஆண்டு விழாவையொட்டி நடைபெற்ற நேர்காணலில், “அவர் ஒரு தீர்வைக் காண்பதற்காக கட்சியின் தலைவர்களுடன் தொடர்ந்து ஆலோசனைகளையும் பேச்சுவார்த்தைகளையும் நடத்தி வருகிறார், என்று அவர் கூறியதாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

நெகிரி செம்பிலான் நெருக்கடியைத் தொடர்ந்து முகமட் ஹசனை வெளியுறவுத்துறை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று கோரியிருந்த டிஏபி இளைஞர் அணிக்கும் அவர் பதிலளித்தார். நெகிரி செம்பிலானின் அனைத்து 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும், பிகேஆர்  தலைவர் அமினுடின் ஹருன் மீதான நம்பிக்கையை இழந்ததாகக் கூறி, அவருக்கு அளித்து வந்த ஆதரவை மீட்டுக் கொண்டதைத் தொடர்ந்து இந்த நெருக்கடி உருவானது.

அம்மாநில அம்னோ சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சியாக மாறுவதற்காக ஆதரவை மீட்டுக் கொள்ளவில்லை என்று ஜாஹித் இன்று தெரிவித்தார்.

மந்திரி பெசார் நியமனத்தில் அவர்கள் உடன்படவில்லை என்று சில புரிதல்கள் அல்லது கருத்துக்கள் இருக்கலாம், ஆனால் இது ஒரு பரந்த கண்ணோட்டத்தில் பார்க்கப்பட வேண்டும், என்று அவர் கூறினார்.

நேற்று, நெகிரி செம்பிலான் அம்னோ தலைவர் ஜலாலுதீன் அலியாஸ் கூறுகையில், மாநிலத்தின் ஒற்றுமை அரசாங்கத்திற்கு தொடர்ந்து ஆதரவு அளிப்பதாக கட்சியின் மத்திய தலைமை ஏற்கனவே தெரிவித்திருந்தாலும், தேவைப்பட்டால் எதிர்க்கட்சி பாத்திரத்தை ஏற்க அம்னோ சட்டமன்ற உறுப்பினர்கள் தயாராக உள்ளனர் என்றார்.

இந்த நெருக்கடிக்குத் தான் பொறுப்பேற்பதாக ஜலாலுதீன் தெரிவித்தார், ஆனால் உறுப்பினர்களைக் கட்சியின் அடிப்படைக் கொள்கை மற்றும் போராட்டப் பாதைக்கு மீண்டும் கொண்டு வருவதற்கு இந்த நடவடிக்கை அவசியமானது என்றும் அவர் வலியுறுத்தினார்.

நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் அமினுடினுக்கு அளித்து வந்த ஆதரவை மீட்டுக் கொண்டதற்கான காரணத்தை ஜலாலுதீன் விளக்கியுள்ளதாகவும், கட்சியின் அந்த முடிவை மதிப்பதாகவும் அம்னோ பொதுச் செயலாளர் அஸ்ரப் வஜ்டி டூசுகி கடந்த வியாழக்கிழமை தெரிவித்தார்.

இருப்பினும், அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்காக நெகிரி செம்பிலானில் உள்ள ஒற்றுமை அரசாங்கத்தை அம்னோ தொடர்ந்து ஆதரிக்கும் என்று அஸ்ரப் கூறினார்.

நெகிரி செம்பிலான் நிர்வாக நெருக்கடி குறித்து அம்னோ மற்றும் பக்காத்தான் ஹராப்பான் ஆகிய கட்சிகள், அடுத்த வாரம் நடைபெற உள்ள ஒற்றுமை அரசாங்கத் தலைமைத்துவ ஆலோசனைக் குழு கூட்டத்தின் மூலம் விவாதிக்கத் திட்டமிட்டுள்ளன.

 

-fmt