சிறுவர் பாலியல் துஷ்பிரயோகப் பொருட்களை விநியோகித்த மற்றும் விற்பனை செய்த குற்றத்திற்காக 69 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த மாத தொடக்கத்தில் நாடு தழுவிய அளவில் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையில், ஆபாச உள்ளடக்கம் மற்றும் சிறார் பாலியல் துஷ்பிரயோகப் பொருட்கள் (child sexual abuse material) விநியோகம் மற்றும் விற்பனையில் ஈடுபட்டதாகக் கூறி, அரசு ஊழியர்கள் உட்பட 69 பேரை காவல்துறையினர் தடுத்து வைத்துள்ளனர்.

ஏப்ரல் 6 முதல் 8 வரை நடத்தப்பட்ட ‘ஆப்ஸ் சைபர் கார்டியன் 2026’ (Ops Cyber Guardian 2026) நடவடிக்கையின் போது 15 முதல் 66 வயதுக்குட்பட்ட சந்தேக நபர்கள் பிடிபட்டதாக காவல்துறைப் படைத் தலைவர் காலித் இஸ்மாயில் தெரிவித்தார்.

மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, புருணே, ஹாங்காங், தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய சர்வதேச ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.

இச்சோதனையின் போது 204,934 CSAM கோப்புகள் மற்றும் 293,756 பெரியவர்களுக்கான ஆபாசக் கோப்புகள் என மொத்தம் 498,690 டிஜிட்டல் கோப்புகளைக் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

காவல்துறை தலைமை ஆய்வாளர் காலித் இஸ்மாயில்

“சிறார் பாலியல் குற்றங்கள் சட்டம் 2017, தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் 1998, தேசியப் பதிவு விதிமுறைகள் 1990 மற்றும் தண்டனைச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டங்களின் கீழ் மொத்தம் 67 விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்டுள்ளன,” என்று காலித் இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

இதுவரை 62 சந்தேக நபர்கள் மீது நீதிமன்றத்தில் 81 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அவர்களில் இருவருக்கு மூன்று முதல் ஏழு மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது, மேலும் ஒருவருக்கு ஆறு மாத சிறைத்தண்டனை மற்றும் 3,500 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

“மற்றொரு 29 நபர்களுக்கு 1,700 ரிங்கிட் முதல் 7,000 ரிங்கிட் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.

சந்தேக நபர்கள் தனித்தனியாகவும் குழுக்களாகவும் செயல்பட்டு, சமூக ஊடகத் தளங்களைப் பயன்படுத்தி இந்தப் பொருட்களை விநியோகித்து விற்பனை செய்ததை காவல்துறை படைத் தலைவர் வெளிப்படுத்தினார்.

இ-வாலட் பரிவர்த்தனைகள் மற்றும் QR குறியீடுகள் மூலம் கட்டண அணுகலை வழங்கி, ஒரு கட்டமைக்கப்பட்ட டிஜிட்டல் முறையை இவர்கள் பயன்படுத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

“பெரும்பாலான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்டு, வணிக லாபத்திற்காக தனிநபர்கள் அல்லது குழுக்களால் தொகுக்கப்பட்டு மறுவிற்பனை செய்யப்பட்டுள்ளன,” என்று அவர் கூறினார்.

குழந்தைகளைத் துன்புறுத்துவர்களுடன் காவல்துறை ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது என்று வலியுறுத்திய அவர், இணைய அச்சுறுத்தல்களைக் குறைக்க பொதுமக்கள் தங்கள் குழந்தைகளின் இணைய செயல்பாடுகளைக் கண்காணிக்குமாறு அறிவுறுத்தினார்.