உலக ஊடக சுதந்திரக் குறியீட்டில் மலேசியா 95-வது இடத்திற்கு சரிவு

அறிக்கையாளர்கள் எல்லைகள் அற்ற அமைப்பின் (RSF) 2026-ஆம் ஆண்டிற்கான உலக ஊடக சுதந்திரக் குறியீட்டில், மலேசியா கடந்த ஆண்டு பெற்ற 88-வது இடத்திலிருந்து தற்போது 95-வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

கடந்த 2025-ஆம் ஆண்டில் 56.09 புள்ளிகளைப் பெற்றிருந்த மலேசியா, இந்த ஆண்டு 52.73 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது.

மலேசியா இதற்கு முன்னதாக 2024-இல் 107-வது இடத்திலும், 2023-இல் 73-வது இடத்திலும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஏசியான் பிராந்தியத்தில், மலேசியா தனது அண்டை நாடான தாய்லாந்திற்கு (92-வது இடம்) அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது. இதனைத் தொடர்ந்து புருணே (96), பிலிப்பைன்ஸ் (114), சிங்கப்பூர் (123), இந்தோனேசியா (129), கம்போடியா (151), லாவோஸ் (154), மியான்மர் (166) மற்றும் வியட்நாம் (174) ஆகிய நாடுகள் உள்ளன.

அரசியல் அழுத்தங்களிலிருந்து ஊடகங்கள் எவ்வளவு சுதந்திரமாகச் செயல்படுகின்றன என்பதை அளவிடும் மலேசியாவின் அரசியல் குறிகாட்டி (political indicator), 44.66-லிருந்து 43.00 ஆகக் குறைந்துள்ளதாக அறிக்கையாளர்கள் எல்லைகள் அற்ற அமைப்பு (RSF)  தெரிவித்துள்ளது.

ஊடகங்களின் நிதி சுதந்திரத்தை மதிப்பிடும் அதன் பொருளாதாரக் குறிகாட்டி, 48.67-லிருந்து 40.28 ஆகக் குறைந்தது.

செய்தியாளர்களைப் பாதிக்கும் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை உள்ளடக்கிய சட்டக் குறிகாட்டி , முன்னதாக 46.26 ஆக இருந்த நிலையில் தற்போது 43.71 ஆக உள்ளது.

சமூக அழுத்தங்கள் மற்றும் சுய-தணிக்கை முறைகளைக் கவனிக்கும் சமூக-கலாச்சாரக் குறிகாட்டி, 62.72-லிருந்து 51.25 ஆகப் பதிவானது.

இருப்பினும், பாதுகாப்பு குறிகாட்டியில் முன்னேற்றம் காணப்பட்டது. இது 78.16-லிருந்து 85.42 ஆக உயர்ந்துள்ளது. உடல் ரீதியான, உளவியல் ரீதியான மற்றும் தொழில்முறை அபாயங்களிலிருந்து ஊடகவியலாளர்களின் பாதுகாப்பிற்கான வலுவான மதிப்பீட்டை இது பிரதிபலிக்கிறது.

 

-fmt