மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக உலகளாவிய உர விநியோகத்தில் ஏற்படக்கூடிய தடையைக் கருத்தில் கொண்டு, யூரியா கொள்முதல் ஒப்பந்தத்தை நீட்டிக்க ஜப்பானும் தேசிய எண்ணெய் நிறுவனமான பெட்ரோனாஸும் ஒப்புக்கொண்டுள்ளன.
ஜப்பான் தற்போது தனது யூரியாவில் நான்கில் மூன்று பங்கை (முக்கால் பகுதி) மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்வதாக அந்நாட்டின் விவசாயம், வனம் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் நோரிகாசு சுசுகி தெரிவித்ததாக வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
யூரியா என்பது உரங்களில் பயன்படுத்தப்படும் ஒரு அத்தியாவசிய மூலப்பொருள் ஆகும்.
ஜப்பான் ஏற்கனவே பெட்ரோனாஸின் துணை நிறுவனம் மூலம் இரண்டு ஆண்டுகளுக்கு யூரியாவை இறக்குமதி செய்ய ஒப்புக்கொண்டிருந்தது.
“மத்திய கிழக்கில் நிலவும் தொடர்ச்சியான நிச்சயமற்ற சூழலுக்கு மத்தியில், விவசாயிகளுக்கு இலையுதிர் காலத்தில் உரங்கள் தேவைப்படும்; அடுத்த ஆண்டைப் பற்றிய கவலைகளும் இருக்கும் என்று நான் நம்புகிறேன்,” என்று சுசுகி கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுசுகியின் அமைச்சகத் தகவலின்படி, ஜூன் 2024 முதல் ஜூன் 2025 வரை இறக்குமதி செய்யப்பட்ட 256,000 டன் யூரியாவில் 74% மலேசியாவிலிருந்து கிடைத்துள்ளது; இதனைத் தொடர்ந்து வியட்நாம் 10% பங்களிப்பை வழங்கியுள்ளது.
பல நாடுகள் பாரசீக வளைகுடா பிராந்தியத்திலிருந்து பெருமளவிலான உரங்களை இறக்குமதி செய்வதாகவும், ஈரான் போர் தொடங்கிய சில வாரங்களிலேயே யூரியாவின் விலை 40 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளதாகவும் வட்டாரங்கள் இன்று காலை செய்தி வெளியிட்டுள்ளது.
-fmt
























