அரசியல் பலம் என்பது இனி தனிப்பட்ட மேலாதிக்கத்தை வைத்து அளவிடப்படாது என்பதை அம்னோ உறுப்பினர்கள் உணர வேண்டும். மாறாக, சமநிலை மற்றும் ஒற்றுமையை வளர்க்கும் ஒரு ஊக்கியாக செயல்படும் திறனை வைத்தே அது அளவிடப்படும் என்று ஜம்ரி அப்துல் காதிர் இன்று தெரிவித்தார்.
தற்போதைய சவால்களை எதிர்கொள்வதில் அம்னோ ஒரு வலிமையான இயக்கமாக நீடிப்பதை உறுதி செய்ய, தனிநபர் சார்ந்த அரசியலுக்குப் பதிலாக, கட்சி மீண்டும் ஒரு நிறுவன ரீதியான அரசியலுக்கு (organisational politics) திரும்ப வேண்டும் என்று ஜம்ரி தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அம்னோ தன்னை ஒரு வழக்கமான அரசியல் அமைப்பிலிருந்து “எதிர்காலத்தை வடிவமைப்பாளர்” என மறுவரையறை செய்து கொள்ள வேண்டும் என்றும், கட்சியின் போராட்டத்தை ஒரு புதிய யுகத்திற்கு கொண்டு செல்லும் ஒரு மூலோபாய பாலமாகச் செயல்பட வேண்டும் என்றும் வட்டாரங்கள் அவரை மேற்கோள் காட்டி கூறியுள்ளது.
அம்னோ தேசத்தின் திசையைத் தீர்மானிக்கும் ஒரு நாகரிக இயக்கமாக மாற வேண்டும். பெருகி வரும் சிக்கலான அரசியல் சூழலை எதிர்கொள்ளும் வகையில், குறுகிய இன உணர்வுகள் மற்றும் தீவிர வெறுப்புணர்வைத் தவிர்த்து, ஒற்றுமை மற்றும் ஒன்றிணைந்த அணுகுமுறையை கட்சி கடைபிடிக்க வேண்டும்.
‘ருமா பாங்சா’ என்ற முன்முயற்சியானது வெறும் முழக்கம் மட்டுமல்ல; அது நீதி, பரஸ்பர மரியாதை மற்றும் ஒரு பொதுவான எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையின் அடிப்படையில் அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைவதற்கான ஒரு உண்மையான தளமாகும்,” என்று அவர் கூறினார்.
இறுதியில், இஸ்லாமிய விழுமியங்கள், தேசப்பற்று, தேசபக்தி, நீதி மற்றும் மனிதாபிமானம் ஆகியவற்றின் அடிப்படையிலான ஒரு ‘இஸ்லா’ சீர்திருத்தம் இயக்கமாக அம்னோ தனது உண்மையான உணர்வுக்குத் திரும்ப வேண்டும்,” என்று அவர் கூறினார்.
அம்னோ வெறும் நினைவுகளைப் போற்றும் ஒரு கட்சியாக மட்டும் இருக்க முடியாது; அது “காலத்தைக் கடந்த ஒரு கட்சியாக மாறுவதற்கான துணிச்சலைக் கொண்டிருக்க வேண்டும். இனி சலுகைகளைத் தேடும் கட்சியாக இல்லாமல், திறன்களை வளர்க்கும், வாய்ப்புகளை உருவாக்கும், புதிய களங்களைத் திறக்கும் மற்றும் உலக அரங்கில் தன்னம்பிக்கையுடன் நிற்கக்கூடிய ஒரு தலைமுறையை உருவாக்கும் கட்சியாக அம்னோ திகழ வேண்டும், என்று அம்னோ உச்சமன்ற உறுப்பினரான ஜம்ரி தெரிவித்தார்.
டிஜிட்டல் உலகில் ஏற்பட்டுள்ள நம்பிக்கைத் தன்மை, அடையாளம் மற்றும் விழுமியங்கள் சார்ந்த நெருக்கடிகளைக் கையாள்வதில், குறிப்பாக நெருக்கடிகளை நிர்வகிப்பதிலும் ஸ்திரத்தன்மையை உருவாக்குவதிலும் அம்னோ தனது அடிப்படை பலத்திற்குத் திரும்ப வேண்டும் என்று அவர் கூறினார்.
அம்னோ விமர்சன ரீதியான சிந்தனை கலாச்சாரத்தை நிலைநிறுத்தும் ஓர் அறிவுசார்ந்த கட்சியாக மாற வேண்டும். மேலும், தேசிய மேம்பாட்டில் கல்வி நிறுவனங்களை மூலோபாய பங்காளிகளாக முன்னிலைப்படுத்த வேண்டும்,” என்று அவர் தெரிவித்தார்.
-fmt
























