புகார்கள் இணையத்தில் வைரலான பிறகே ஒழுங்கீனச் செயல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கூறப்படுவதைக் கல்வி அமைச்சகம் மறுத்துள்ளது

ஆசிரியர்கள் சம்பந்தப்பட்ட ஒழுங்கீனச் செயல்கள் குறித்த புகார்கள் இணையத்தில் வைரலான பிறகே தனது அமைச்சு நடவடிக்கை எடுக்கிறது என்ற குற்றச்சாட்டுகளைக் கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடெக் மறுத்துள்ளார்.

இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும்போதெல்லாம், பெற்றோர்களும் ஆசிரியர்களும் அதிகாரிகளிடம் புகார் அளிப்பதாகவும், அவர்கள் முழுமையான விசாரணைகளை மேற்கொள்வதாகவும் ஃபத்லினா கூறினார்.

பாதிக்கப்பட்ட மாணவர்களைப் பாதுகாப்பு மற்றும் மருத்துவப் பரிசோதனைகளுக்காகச் சமூக நலத்துறையிடம் அழைத்துச் செல்வது போன்ற அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

இருப்பினும், இத்தகைய சம்பவங்கள் குறித்து அனைத்து மாவட்ட கல்வி அலுவலகங்களும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், இணையத்தில் சர்ச்சை ஏற்படும் வரை காத்திருக்காமல் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

“பாலியல் துன்புறுத்தல் மற்றும் இதர வழக்குகள் பற்றிய தகவல் தெரிந்த எவரும், அது குறித்து நேரடியாக அதிகாரிகளிடம் புகார் அளிக்க வேண்டும். சமூக ஊடகங்களைப் புகாரளிப்பதற்குப் பயன்படுத்த வேண்டாம், ஏனெனில் அது எங்கும் கொண்டு சேர்க்காது. அதிகாரிகளிடம் புகாரளிப்பதே சரியான வழிமுறை.

“எனவே, பாதுகாப்பளிக்கப்பட வேண்டிய குழந்தைகள் இதில் சம்பந்தப்பட்டிருப்பதால், சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களும் இந்த நிலைப்பாட்டை உறுதியாகக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்,” என்று இங்குள்ள எஸ்.ஜே.கே.சி ஹெங் ஈ  பள்ளியில் செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

சரவாக்கில் ஆசிரியர் ஒருவர் மாணவர் ஒருவரிடம் பாலியல் ரீதியாகத் தவறாக நடந்துகொண்டதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டை அடுத்து, அவர் மாவட்டக் கல்வி அலுவலகத்திற்கு மாற்றப்பட்ட சம்பவம் குறித்து அமைச்சர் விளக்கமளித்தார்.

காவல்துறை விசாரணைகளைக் கருத்தில் கொண்டு இது ஒரு தற்காலிக நடவடிக்கை என்று சரவாக் கல்வித் துறை தெரிவித்துள்ளதாக வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

நேற்று அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பள்ளிப் பாதுகாப்பு வழிகாட்டுதல்கள், பள்ளிகள், ஆசிரியர்கள் மற்றும் குழந்தைகள் சம்பந்தப்பட்ட வழக்குகளைக் கையாளும் தரப்பினர் மேற்கொள்ள வேண்டிய கூட்டுப் பொறுப்பை விளக்குகின்றன என்று ஃபத்லினா மேலும் கூறினார்.

இதற்கிடையில், பெர்லிஸில் ஆறாம் ஆண்டு மாணவி ஒருவர் அமர முயன்றபோது, அவரது வகுப்புத் தோழர் நாற்காலியை இழுத்ததால் அந்த மாணவி காயமடைந்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து உள்வட்டார விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் பிப்ரவரி மாதம் நடந்தது, ஆனால் இச்சம்பவத்தின் காரணமாக ஏற்பட்ட கீழ் முதுகு மென் திசு காயம் காரணமாக அந்த 12 வயது சிறுமியால் கடந்த நான்கு மாதங்களாகப் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை என்று நேற்று வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், இச்சம்பவத்தைத் தொடர்ந்து அந்தச் சிறுமிக்கு ஃபங்க்ஷனல் நியூராலஜிக்கல் டிஸார்டர் (நரம்பியல் குறைபாடு) மற்றும் போஸ்ட்-டிராமடிக் ஸ்ட்ரெஸ் டிஸார்டர் (மன அழுத்தக் கோளாறு) அல்லது PTSD பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

 

 

-fmt