அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் ஜூலை 4-ஆம் தேதியுடன் நிறைவடைந்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 250 பேருக்கு பொதுமன்னிப்பு வழங்க திட்டமிட்டிருந்ததாகக் கூறப்பட்ட தகவல் எதுவும் நடைமுறைக்கு வந்ததாகத் தெரியவில்லை.
வாஷிங்டன் டிசியில் இன்று அதிகாலை 2 மணி நிலவரப்படி, டிரம்ப் வெறும் 11 பேருக்கு மட்டுமே பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார் — மேலும் இதில் தலைமறைவாக இருக்கும் நிதித்துறை மோசடி மன்னன் லோ டேக்ட் ஜோ (Low Taek Jho) இடம்பெறவில்லை.
சுதந்திர தினக் கொண்டாட்டங்களை முன்னிட்டு வெள்ளிக்கிழமை மன்னிப்பு வழங்கப்பட்ட 11 பேரில், இருவர் மோசடி குற்றத்தில் தண்டனை பெற்றவர்கள். மற்ற ஒன்பது பேர், லாரிகளின் மாசு வெளியேற்றக் கட்டுப்பாட்டு அமைப்புகளை மாற்றியமைத்தது மூலம் கூட்டாட்சி தூய காற்றுச் சட்டத்தை (Federal Clean Air Act) மீறியதாக குற்றம் சாட்டப்பட்டவர்கள்.
முன்னதாக, “250 ஆண்டுகளுக்கு 250 பொதுமன்னிப்புகள்” என்ற யோசனையை வெள்ளை மாளிகை பரிசீலித்து வருவதாக ‘தி அட்லாண்டிக்’ (The Atlantic) இதழ் செய்தி வெளியிட்டிருந்தது.
இந்த பட்டியலில் லோ தவிர, பிரபல கலைஞர் பிராஸ் மிச்செல் (Pras Michel) பெயரும் இருந்ததாகக் கூறப்படுகிறது. 1MDB நிதி முறைகேட்டிற்குப் பிறகு, அதுகுறித்த அமெரிக்காவின் குற்றவியல் விசாரணைகளை நிறுத்துவதை நோக்கமாகக் கொண்டு, லோ மற்றும் சீன அரசு அதிகாரி ஒருவருடன் இணைந்து பரப்புரை (lobbying) செய்ய சதித் திட்டம் தீட்டியதாக பிராஸ் மிச்செல் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார்.
4.5 பில்லியன் அமெரிக்க டாலர் கொள்ளை
கோல்ட்மேன் சாக்ஸ் (Goldman Sachs) வங்கியின் முன்னாள் அதிகாரிகள் இருவருடன் இணைந்து, 1MDB நிதியத்திலிருந்து குறைந்தது 4.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை (சுமார் 17.7 பில்லியன் மலேசிய ரிங்கிட்) சுருட்டிய திட்டத்தின் பின்னணியில் லோ மாஸ்டர்மைண்டாக (சூத்திரதாரியாக) செயல்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மே 13 அன்று, ‘தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ (The Wall Street Journal) வெளியிட்ட செய்தியில், டிரம்ப்பிடம் லோ சமர்ப்பித்துள்ள விண்ணப்பம் “தண்டனை முடிந்த பிறகு வழங்கப்படும் பொதுமன்னிப்பை” (pardon after completion of sentence) கோருவதாகவும், அதன் நிலை இன்னும் நிலுவையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2024-ஆம் ஆண்டில், ஒரு சிவில் பறிமுதல் வழக்கில் கோரப்பட்ட 100 மில்லியன் அமெரிக்க டாலர்களைத் திருப்பித் தருவதற்காக, அமெரிக்க நீதித் துறையுடன் (DoJ) லோ ஒரு சமரச உடன்பாட்டைச் செய்து கொண்டார்.
மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்படுவதற்கும் இந்த 1MDB ஊழலே வழிவகுத்தது. அவரும் தற்போது மலேசியாவில் பொதுமன்னிப்பு கோரி விண்ணப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
























