இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும்: திமுக-ஆதிமுக கோரிக்கை

இலங்கையின் இறுதிப் போரின்போது நடந்ததாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்குற்றங்கள் தொடர்பில் ஐ.நா மன்றத்தின் மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்காவால் கொண்டுவரப்படும் தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளிக்கவேண்டும் என்று இந்திய நாடாளுமன்றத்தில் திமுக மற்றும் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர்.

இந்திய நாடாளுமன்றத்தின் இந்த ஆண்டுக்கான நிதிநிலை கூட்டத்தொடர் திங்கட்கிழமை துவங்கியது. இதன் முதல் நிகழ்வாக குடியரசுத் தலைவர் பிரதீபா பாடில் உரை நிகழ்த்தினார்.

அப்போது ஐ.நா மன்றத்தின் மனித உரிமை ஆணையத்தில் இலங்கை நிலவரம் குறித்த வாக்கெடுப்பில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை முன்வைத்தனர்.

திமுகவைத் தொடர்ந்து அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதே கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.

இந்திய குடியரசுத் தலைவரின் உரையில் இலங்கை தொடர்பான இந்திய அரசின் நிலைப்பாடு குறித்த பகுதியில் இலங்கையில் போரினால் இடம்பெயர்ந்த தமிழர்களின் மீள்குடியேற்றத்திற்கு இந்தியா உதவுவதாக மட்டுமே குறிப்பிடப்பட்டிருப்பதாகவும், அங்கு நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து ஒன்றும் கூறப்படவில்லை என்றும் கூறினார் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் மைத்ரேயன்.

ஐ.நா மனித உரிமை மன்றத்தில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்கவேண்டும் என்பதே தமது கட்சியின் நிலைப்பாடு என்றும், அதற்கு மாறாக இலங்கைக்கு ஆதரவாக வாக்களிப்பதோ, இந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் தவிர்ப்பதோ இந்தியா செய்யக்கூடாது என்றும் அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.