சரத் பொன்சேகாவை விடுவிக்க அதிபர் மகிந்தா ராஜபக்சே கையொப்பம்

இலங்கை முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விடுவிக்க, குடியரசுத் தலைவர் ராஜபக்சே கையெழுத்திட்டுள்ளார். இலங்கையில் விடுதலைப் புலிகளுடனான சண்டை முடிந்த பிறகு, இந்த வெற்றிக்கு மகிந்தா ராஜபக்சேவும், சரத் பொன்சேகாவும் உரிமை கொண்டாடினர்.

இதன் எதிரொலியாக, 2010ல் நடந்த தேர்தலில், ராஜபக்சேவை எதிர்த்து சரத் பொன்சேகா போட்டியிட்டு தோல்வியடைந்தார். அரசியல் எதிரியாகிவிட்ட சரத் பொன்சேகா மீது, ஊழல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.இந்நிலையில், பொன்சேகாவின் மனைவி அனோமா, ராஜபக்சேவை சந்தித்துப் பேசினார். இதைத் தொடர்ந்து உயர் நீதிமன்றம், பொன்சேகாவுக்கு கடந்த வாரம் பிணை  வழங்கியது.

சரத் பொன்சேகாவை விடுதலை செய்யும் ஆவணங்களில், குடியரசுத் தலைவர் ராஜபக்சே நேற்று முன்தினம் கையெழுத்திட்டார். இதையடுத்து, சரத் பொன்சேகா சிறையிலிருந்து இன்று விடுதலை செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TAGS: