அசாஞ்சை ஸ்வீடனிடம் ஒப்படைக்க லண்டன் நீதிமன்றம் உத்தரவு

பல்வேறு நாட்டின் இரகசியங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய, ‘விக்கி லீக்ஸ்’ நிறுவனர் ஜூலியன் அசாஞ்சை, ஸ்வீடன் நாட்டிடம் ஒப்படைக்கும் படி, பிரிட்டன் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்காவின் இராணுவ இரகசியங்கள் உள்ளிட்ட பல்வேறு இரகசியங்களை ‘விக்கி லீக்ஸ்’ இணைய தளத்தில் வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியவர் ஜூலியன் அசாஞ்ச்.

இரண்டு பெண்களை கற்பழித்ததாக கூறி, ஸ்வீடன் அரசு இவர் மீது வழக்கு தொடர்ந்தது.

இதையடுத்து அசாஞ்ச், பிரிட்டனில் தஞ்சம் புகுந்தார். ஸ்வீடன் கோரிக்கை படி இவர் கைது செய்யப்பட்டார். இலண்டன் நீதிமன்றம் இவருக்கு பிணை வழங்கியது.

இதற்கிடையே தங்கள் நாட்டிடம் ஒப்படைக்கும் படி ஸ்வீடன் கோரியது. இதை எதிர்த்து அசாஞ்ச், மனு செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகளில் ஐந்து நீதிபதிகள் அசாஞ்சை, ஸ்வீடனிடம் ஒப்படைக்கும் படி உத்தரவிட்டுள்ளனர். இந்த உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்யப் போவதாக அசாஞ்ச் தெரிவித்துள்ளார்.