கோத்தபய வேண்டுகோளை ஏற்று இலங்கை கடற்படைக்கு இந்தியா அதிநவீன பயிற்சி

சிங்கப்பூரில், ஆசிய பாதுகாப்பு உச்சி மாநாடு நடைபெற்றது. அதில், இலங்கை வெளியுறவுத்துறை மந்திரி ஜி.எல்.பெரீஸ் தலைமையிலான இலங்கை பிரதிநிதிகள் குழு கலந்து கொண்டது. அக்குழுவில் இடம்பெற்றுள்ள இலங்கை பாதுகாப்பு செயலாளரும், ஜனாதிபதி ராஜபக்சேவின் சகோதரருமான கோத்தபய ராஜபக்சேவும், ஜி.எல்.பெரீசும் இணைந்து மாநாட்டில் கலந்து கொண்ட இந்திய இராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணியை சந்தித்து பேசினர். அத்துடன் அமெரிக்க இராணுவ தளபதி மார்ட்டின் டெம்ப்சியையும் சந்தித்தனர்.

அப்போது, இலங்கை கடற்படைக்கு அதிநவீன பயிற்சி அளிக்க வேண்டும் என்று இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் கோத்தபய ராஜபக்சே வேண்டுகோள் விடுத்தார். அதை இந்தியாவும், அமெரிக்காவும் ஏற்றுக்கொண்டுள்ளன.

இலங்கை வெளியுறவு அமைச்சகம் இத்தகவலை ஓர் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இலங்கை கடற்படைக்கு அதிநவீன பயிற்சி அளிக்குமாறு இந்தியாவிடமும், அமெரிக்காவிடமும் இலங்கை பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்சே வேண்டுகோள் விடுத்தார். இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நாடுகள் என்ற முறையில், அந்த வேண்டுகோளுக்கு இந்தியாவும், அமெரிக்காவும் சாதகமான பதிலை அளித்துள்ளன.

கடலோர நாடு என்ற முறையில், இந்திய பெருங்கடலில் கடல்வழி பாதுகாப்பை பலப்படுத்துவதில் இலங்கை முக்கிய பங்கு வகிக்கும். சர்வதேச தீவிரவாதத்தை ஒடுக்குவதற்கு ஒத்துழைப்பு வழங்கும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.