இலங்கையில் 43 ஆயிரம் வீடுகள் இந்தியா கட்டித்தர ஒப்பந்தம்

கொழும்பு: இலங்கையில், போரின் போது வீடுகளை இழந்த, 43 ஆயிரம் தமிழர்களுக்கு, வீடுகளை கட்டித் தர, இந்தியா முன்வந்துள்ளது.

இலங்கையில், கடந்த 2009ம் ஆண்டு, இராணுவத்துக்கும், விடுதலை புலிகளுக்கும் இடையே சண்டை நடந்த போது, 2 லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள், வீடுகளை இழந்து, அகதிகள் முகாமுக்கு சென்றனர்.

விடுதலை புலிகளுடனான சண்டை, முடிவுக்கு வந்துள்ள நிலையில், தமிழர்கள் வாழும் பகுதிகளில் மறுசீரமைப்பு பணிகள் நடக்கின்றன.

இதற்கிடையே, தமிழர்களுக்கு, 50 ஆயிரம் வீடுகளை கட்டித்தர, இந்தியா உறுதியளித்தது. இதன் ஒரு கட்டமாக, யாழ்பாணம், கிளிநொச்சி மற்றும் மூன்று மாவட்டங்களில் ஏற்கனவே ஆயிரம் வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. இந்நிலையில், வடகிழக்கு மாகாணங்களில், 43 ஆயிரம் வீடுகளை 1,500 கோடி இந்திய ரூபாய் செலவில் கட்டித் தருவதற்குரிய ஒப்பந்தம் கடந்த 13ம் தேதி கொழும்பில் கையெழுத்தானது.

இந்திய தூதர் அசோக் காந்தா, இலங்கை பொருளாதார மேம்பாட்டுத்துறை அமைச்சர் பசில் ராஜபக்ஷே ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஒளிவு மறைவற்ற முறையில் பயனாளிகளுக்கு, வீடுகள் ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக இந்திய தூதரகத்தின் மூலம் உரிய பயனாளிகளின் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட உள்ளதாக இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.