வாஷிங்டன்: அமெரிக்காவில், சீக்கியர்களின் கோயிலான குருத்வாராவில், மர்மநபர்கள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தியதில் துப்பாக்கிச்சூடு நடத்திய ஒருவன் உள்பட 7 பேர் பலியாயினர். இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பீதியில் உறைந்து போயினர்.
அமெரிக்காவில் கடந்த இரு வாரங்களுக்கு முன் சினிமா தியேட்டரில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் சுவடு மறைவதற்குள் சீக்கிய கோயிலான குருதுவாராவில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் அமெரிக்கர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
அமெரிக்காவின் விஸ்கோன்சின் மாகாணத்தின் ஓ-கிரீக் நகரின் மில்வயூக்கி பகுதியில் சீக்கியர்களின் கோயிலான குருத்வாரா உள்ளது. இக்கோயிலில் நேற்று அமெரிக்க உள்ளூர் நேரப்படி காலை 10.30 மணியளவில் இரு நபர்கள் துப்பாக்கியுடன் திடீரென புகுந்து அங்கிருந்தவர்கள் மீது சராமாரியாக சுட்டனர்.
இதில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பதில் தாக்குதல் நடத்தினர். இதில் ஒருவன் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டான். இந்த தாக்குதலில் 7 பேர் பலியாயினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சம்பவம் அறிந்த இந்தியா – தொடர்ந்து அமெரிக்க தூதரகத்துடன் தொடர்பில் உள்ளது. சீக்கிய அமைப்புகள் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. சம்பவம் குறித்து விஸ்கோன்சியஸ் மாகாண கவர்னர் ஸ்காட் வாக்கர் , பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.