சென்னை: இலங்கை தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாடு சென்னையில் நடத்த தடை விதிக்க வேண்டும் என்ற வழக்கில் பல திருப்பங்கள் ஏற்பட்டுள்ளது. தமிழக போலீஸ் தரப்பில் கேட்கப்படும் விளக்கத்திற்கு உரிய பதில் தி.மு.க., அளிக்கவில்லை என்றும் இதனால் சென்னையில் நடத்த அனுமதிக்க முடியாது என்றும் அரசு தரப்பில் ஆஜராக வக்கீல் சென்னை கோர்ட்டில் தெரிவித்தார்.
டெசோ மாநாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என கோரும் வழக்கு சென்னை கோர்ட்டில் தொடரப்பட்டது. வழக்கு விசாரணை இன்று நடந்தது. இந்த வழக்கில் ஆஜரான அரசு வக்கீல் நவநீதகிருஷ்ணன் கோர்ட்டில் தெரிவித்ததாவது:
சென்னை ஓய்.எம்.சி.ஏ., மைதானத்தில் 8 ஆயிரம் பேர் மட்டுமே அமரக்கூடிய அளவிற்கு இடவசதி உள்ளது. இதனால் இந்த மாநாட்டில் எத்தனை பேர் வருவர் என்றும், எத்தனை வாகனங்கள் வரும் என்றும் தி.மு.க.,விடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
ஆனால் இது வரை சரியான பதில் எதுவும் இல்லை. சென்னையை தவிர வேறு எங்கு வேண்டுமானாலும் மாநாட்டை நடத்தட்டும் என தெரிவித்தார்.
வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்றது. இது தொடர்பான உத்தரவை பிறப்பித்த நீதிபதி இது தொடர்பாக தமிழக போலீசாரே முடிவு எடுத்துக்கொள்ளலாம் என உத்தரவிட்டார்.
இதற்கிடையில் இலங்கை தொடர்பான மாநாட்டில் தமிழ் ஈழம் என்ற வார்த்தையை பயன்படுத்தக்கூடாது என மத்திய அரசு ஒரு உத்தரவை தி.மு.க.,வுக்கு பிறப்பித்துள்ளது. இதுவும் தி.மு.க.,வுக்கு தர்மச்சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது இம்மாநாட்டில் வெளிநாடுகளில் இருந்து பல தமிழ்தலைவர்கள் வரவுள்ளனர். இவர்களுக்கான விசா தொடர்பான அனுமதி கடிதம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு பதில் அனுப்பியுள்ள மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் மாநாட்டில் கருத்து வேறுபாடு இல்லை. ஆனால் ஈழம் என்ற சொல்லை பயன்படுத்தக்கூடாது என்று பதில் கடிதத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
டெசோ என்பதன் முழு விளக்கத்தின்படி தமிழ் ஈழம் சப்போர்ட்டிங் ஆர்கனிசேஷன் என்று வருகிறது. அப்படியானால் இந்த அமைப்பின் பெயரை பயன்படுத்த முடியுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.