இந்தியா, அமெரிக்காவில் உள்ளதைப் போன்ற ஜனநாயக அமைப்பு நடைமுறை இலங்கையில் வராவிட்டால் நிச்சயம் தமிழீழம் அமையும். அதை யாராலும் தடுக்க முடியாது. அப்படி தமிழீழம் அமைந்தால் அது இந்தியாவின் நட்பு நாடாகவே திகழும் என்று இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் ஆலோசகரான பொன்ராஜ் தெரிவித்துள்ளார்.
அப்துல் கலாமின் ஆலோசகர் வெளியிட்டுள்ள இந்த அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ராஜபக்சேவின் இந்திய வருகையை எதிர்த்து வைகோ இந்திய மத்திய பிரதேசத்தில் நடத்திய போராட்டத்திற்கும் பொன்ராஜ் தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பொன்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
மத்திய பிரதேசம் மாநிலத்தில், புத்தமத பல்கலைக்கழகத்துக்கு அடிக்கல் நாட்ட வந்த இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு கறுப்பு கொடி காட்டுவதற்கு தமிழகத்தில் இருந்து வைகோ தலைமையில் பலர் சென்று அங்கு கைதாகியுள்ளனர். இதுபோன்ற ஒரு போராட்டம் வரலாற்றில் இதுவரை நடந்தது இல்லை.
இந்த போராட்டத்தினால், இலங்கையில் தமிழர்களின் நியாயமான போராட்டத்தை பிற மாநிலத்தவர்கள் உணர்ந்துள்ளனர். முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் காலம் முதல், இலங்கை தமிழர்களின் அகிம்சை வழி மற்றும் ஆயுதம் ஏந்திய போராட்டங்களின் வரலாற்றை உயர் அதிகாரிகள் திரித்துக் கூறிவருகின்றனர்.
இதனால், பெரும்பான்மையான வடமாநில தலைவர்கள், ஈழத் தமிழர்கள் இலங்கையின் பூர்வீக குடிமக்கள் இல்லை என்று தவறாக நினைத்து கொண்டிருக்கின்றனர். ஆனால், புராண காலம் முதல் இலங்கையில் தமிழர்கள் அங்கு வாழ்ந்து வந்துள்ளனர் என்பதை வரலாற்று நூல்கள் நிரூபிக்கின்றன.
எனவே, இலங்கை அரசின் மனித தன்மையற்ற செயலையும், ஈழத் தமிழர்களின் நியாயமான போராட்டத்தையும் நாமெல்லாம் ஒருங்கிணைந்து செயல்பட்டு வடமாநில தலைவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.
இந்த பணியை வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக செய்து முடிக்கவேண்டும். இல்லையென்றால், நாட்டின் முக்கிய பொறுப்புக்கு வரவுள்ள அடுத்த தலைவருக்கும், இலங்கை தமிழர்களின் போராட்டத்தை உயர் அதிகாரிகள் திரித்துக்கூறி விடுவார்கள். இதனால், புதிதாக தலைமை ஏற்கும் தலைவரும், ஈழத் தமிழர்களுக்கு எதிராக நடவடிக்கையில் ஈடுபடக்கூடும்.
இலங்கை தமிழர்களின் நியாயமான போராட்டத்தை உணர்ந்து கொள்ளும் அளவுக்கு மிகப்பெரிய தேசிய தலைவரை காண்பது அரிதாக உள்ளது. எனவே, தமிழக அரசியல் தலைவர்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டு, இலங்கையுடன் இந்தியா மேற்கொண்டு வரும் வெளிவிவகார கொள்கைகளை மாற்றியமைக்க முயற்சிக்க வேண்டும்.
ஜனநாயக முறையை அமலுக்கு கொண்டு வர இலங்கைக்கு கொஞ்சம்கூட விருப்பம் இல்லை. பொதுத்தேர்தலில், தமிழ் தலைவர்கள் வெற்றி பெறுவதை தடுக்கும் விதமாக தமிழர்கள் குடியிருப்பு பகுதிகளில் எல்லாம் சிங்களவர்களை குடியமர்த்துகின்றனர்.
தமிழர்கள் ஆயுதம் ஏந்தியதற்கு, இலங்கை அரசுதான் முக்கிய காரணம். விடுதலைப் புலிகளை தவிர, உலகில் எந்த ஒரு விடுதலை இயக்கமும் ஒழுக்கம், தியாகம் கொண்ட முப்படை இராணுவத்தை கொண்டிருக்கவில்லை.
இந்தியாவை தூண்டில் போல் பயன்படுத்திக்கொண்டு, அரசியல், பொருளாதார, இராணுவ உதவிகளை எல்லாம் இலங்கை பெற்று அனுபவிக்கிறது. அதே நேரம், சீனாவின் தீவிர நட்பு நாடாக இலங்கை திகழ்கிறது. இந்த விஷயத்தில், இந்தியாவின் வெளிவிவகார கொள்கை முற்றிலும் தோல்வியடைந்துள்ளது.
சீனாவின் அச்சுறுத்தல், மிரட்டல் ஆகியவைகளை எதிர்க்க இந்தியாவுக்கு பலம் இருந்தும், வெளிவிவகார கொள்கையில் தோல்வியடைந்துள்ளதால், அண்டை நாடுகள் இந்தியாவுடன் நல்ல உறவுகளை வைத்துக்கொள்வது இல்லை. இதனால், அந்த நாடுகள் சீனாவை துருப்பு சீட்டாக பயன்படுத்தி இந்தியாவை கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது.
மிகப்பெரிய நாடாக இருந்தும், கேலிக்கூத்தான வெளிவிவகார கொள்கையை வைத்துள்ளதால் இந்தியாவை இலங்கை வஞ்சித்து ஏமாற்றுகிறது.
ஆசிய கண்டத்தில், மிகப்பெரிய சக்தியாக திகழும் இந்தியாவும் சீனாவும் எதிர்காலத்தில் உலக பொருளாதாரத்தின் 60 விடுக்காடு பங்களிப்பை கொண்டு இருக்கும். இதனால், இந்தியாவை ஒருபோதும் எதிரி நாடாக சீனா கருதாது. ஆனால், இலங்கையுடன் பொருளாதார உறவுகளை கொண்டுள்ள சீனா எதிர்காலத்தில் இராணுவதத் தளத்தை இலங்கையில் அமைக்கும்.
எனவே, இலங்கைக்கு இந்தியா உதவி செய்வதை நிறுத்தவேண்டும். அவ்வாறு செய்யாத பட்சத்தில், அது உள்நாட்டின் பாதுகாப்புக்கு குந்தகத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
அதே நேரம், இலங்கையில் அரசியல் தீர்வுகாண இந்தியா முயற்சித்தால் அதை ஒருபோதும் சீனா எதிர்க்காது. எனவே இலங்கையில் ஜனநாயகம் மலர இந்தியா நடவடிக்கை எடுக்கவேண்டும்.
தமிழக அரசியல் தலைவர்கள் ஒன்று சேர்ந்து, ஆலோசனை நடத்தி இந்திராகாந்திக்கு பின் இந்திய அரசு மேற்கொண்டு வரும் வெளிவிவகார கொள்கையை மாற்றியமைக்க செய்யவேண்டும். இந்தியா மற்றும் அமெரிக்காவில் உள்ள ஜனநாயக முறையை இலங்கையில் ஏற்படுத்த வேண்டும். இது ஒன்றே இலங்கை தமிழர்களுக்கு நம்மால் வழங்கக்கூடிய உடனடி தீர்வாகும்.
இதன்பின்னரும், இந்த ஜனநாயக முறையை இலங்கை அரசு ஏற்கவில்லை என்றால், தனித் தமிழீழம் அமைவதை பூமியில் உள்ள எவராலும் தடுக்க முடியாது. தொலைநோக்கு பார்வை கொண்ட அரசியல் தலைவர் முக்கிய பதவிக்கு வந்து, இந்தியாவின் வெளிநாட்டு கொள்கையை மாற்றி அமைத்துவிட்டால் தனி ஈழம் என்ற கனவு நிறைவேறுவது நெடுந்தொலைவில் இல்லை. இந்த கனவு நிறைவேறினால், தமிழீழ நாடு, இந்தியாவின் உண்மையான நட்பு நாடாக திகழும். இந்த தேசத்தின் நல்ல மனிதர்களுடன் என் தனிப்பட்ட கருத்துக்களை பகிர்ந்துகொள்வதற்காக இதையெல்லாம் கூறுகிறேன்” என்று அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.