பாகிஸ்தானின் வடமேற்கே உள்ள ஸ்வாத் பள்ளத்தாக்கு பழங்குடியினப் பகுதியில் பெண் குழந்தைகளின் கல்விக்காகக் குரல்கொடுத்து வந்தவரும், சமாதானத்துக்கான பன்னாட்டு விருது ஒன்றுக்காக பெயர் முன்மொழியப்பட்டவருமான மலாலா யூஸுஃப்ஸயீ என்ற 14 வயது சிறுமி மீது துப்பாக்கிசூடு நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதலில் காயமடைந்த இவரும் இன்னொரு சிறுமியும் உயிராபத்திலிருந்து மீண்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
ஸ்வாத் பகுதியின் முக்கிய நகரமான மின்கோராவில் பள்ளிக்கூடத்திலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த பெண் பிள்ளைகளை ஏற்றிக்கொண்டு சென்ற ஒரு வாகனத்தை தாடிவைத்திருந்த துப்பாக்கிதாரிகள் வழியில் நிறுத்தியதாகவும், அந்தக் காரில் மலாலா யூஸுஃப்ஸாய் இருக்கிறாரா என்று கேட்டுவிட்டு பின்னர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் அந்த வட்டாரத்திலிருந்து கிடைக்கின்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேநேரம், பள்ளிப் பிள்ளைகள் ஒரு வாகனத்தில் ஏறிக்கொண்டிருந்தபோது இனந்தெரியாத ஆயுததாரிகள் துப்பாக்கிசூடு நடத்தியதாக பொலிஸ்காரர் ஒருவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
மலாலாவுக்கு தலையிலோ அல்லது கழுத்திலோ குண்டு பாய்ந்ததாகவும், ஆனால் உயிராபத்திலிருந்து அவர் காப்பாற்றப்பட்டுவிட்டார் என்றும் தெரிவிக்கப்படுகிறது. வேறு ஒரு சிறுமியும் அந்நேரம் காயம்பட்டுள்ளார்.
தனது டயரி குறிப்புகளுக்காக தீரச் செயலுக்கான தேசிய விருது மலாலாவுக்கு கிடைத்திருந்தது
தாலிபான்கள் ஸ்வாத் பள்ளத்தாக்கை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த போது மலாலாவுக்கு வெறும் 11 வயதுதான். அந்தப் பகுதியில் உள்ள பெண்கள் பள்ளிக்கூடம் அனைத்தும் மூடப்பட வேண்டுமென தாலிபான்கள் அப்போது உத்தரவிட்டிருந்தனர்.
அந்த நேரத்தில் பிபிசி உருது சேவைக்கு புனைப்பெயரொன்றில் தனது டயரிக் குறிப்புகளை மலாலா வழங்கிவந்தார்.
ஆயுததாரிகளால் தங்களுக்கு ஏற்படுகின்ற கஷ்டங்களை அவர் வெளியுலகுக்கு தெரிவித்துவந்தார்.
தாலிபான்கள் ஸ்வாத்திலிருந்து விரட்டப்பட்ட பின்னர்தான் இந்த டயரிக் குறிப்புகளை எழுதியது இந்தச் சிறுமிதான் என்ற விவரம் வெளியிடப்பட்டது.
பெரியவளாகும்போது சட்டம் படித்துவிட்டு அரசியலுக்கு வர வேண்டும் என்று ஆவல் வெளியிட்டவர் இந்தச் சிறுமி.
தீரச் செயலுக்கான தேசிய விருதை வென்ற மலாலாவின் பெயர் சிறார்களுக்கான பன்னாட்டு அமைதி விருது ஒன்றுக்கும் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
கல்விக்கு முன்னுரிமை அளிக்கும் ஒரு இடமாக தனது நாடு வரவேண்டும் என்பதே தனது கனவு என்று இவர் கூறியிருந்தார்.