கொழும்பில் உள்ள வெலிக்கடை சிறைச்சாலையில் சிறப்பு அதிரடிப் படையினருக்கும் கைதிகளுக்கும் இடையில் ஏற்பட்ட ஆயுத மோதல்களில் குறைந்தது 27 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 40 பேர் வரை காயமடைந்துள்ளனர்.
27 சடலங்கள் மருத்துவமனைக்கு கொண்டுவரப்படுள்ளதாகவும் காயமடைந்த 37 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாகவும் கொல்லப்பட்ட கைதிகள் அனைவரும் சிங்களவர்கள் என்றும் கொழும்பு தேசிய மருத்துவமனையின் பணிப்பாளர் டாக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலை வளாகத்துக்குள் தேடுதல் நடத்தச்சென்ற சிறப்பு அதிரடிப் படையினருக்கும் (STF) அங்கிருக்கின்ற கைதிகளுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் பின்னர் ஆயுத மோதலாக மாறியது.
தேடுதல் நடத்த வந்த சிறப்பு அதிரடிப் படையினருக்கும் மரண தண்டனைக் கைதிகளுக்கும் இடையில் ஆரம்பத்தில் ஏற்பட்ட முறுகல் நிலையே பின்னர் பெரும் மோதலாக வெடித்ததாகவும் கைதிகளை சிறைக்கூடத்துக்குள் தள்ளி படையினர் கண்ணீர்ப்புகைப் தாக்குதல் மேற்கொண்டதாகவும்தெரிவிக்கப்படுகிறது.
அதனையடுத்து, வெளியில் நின்ற கைதிகள் படையினரை கற்களால் தாக்கியதாகவும் தொடர்ந்து இருதரப்புக்கும் இடையில் பயங்கர மோதல் ஏற்பட்டதாகவும் சிறையில் இருந்த துப்பாக்கி வைப்பக அறையை உடைத்த கைதிகள் அங்கிருந்த துப்பாக்கிகளை எடுத்துக்கொண்டு அதிரடிப்படையினரை நோக்கி சுட்டதாகவும் மேலும் தெரியவருகிறது.
மாலை இரண்டரை மணியளவில் ஆரம்பமமான மோதல் பல மணிநேரம் கடந்து தொடர்ந்ததாக அங்குள்ள செய்தியாளர்கள் கூறுகின்றனர்.
வெலிக்கடை வளாகத்தை சுற்றி இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட படையினர் குவிக்கப்பட்டிருப்பதாகவும் கவச வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் செய்தியாளர்கள் கூறுகின்றனர்.
மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், சிறைச்சாலையின் ஒருபகுதியை கைதிகள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த நிலையில் தாக்குதல்கள் நடந்துள்ளன.
இதனிடையே, இரு தரப்பு மோதல்களில் காயப்பட்டவர்களில் சிறப்பு அதிரடிப் படை கமாண்டர் டிஐஜி ஆர்எம்சி ரணவனவும் அடங்குகிறார். அவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அவசர சகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்ட்டுள்ளார்.