அனைத்துலக மனித உரிமைகள் தினம்: இலங்கையில் அமைதி ஆர்ப்பாட்டங்கள்

அனைத்துலக மனித உரிமைகள் தினத்தையொட்டி இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மற்றும் மன்னார் ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன.

கிளிநொச்சியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்த்தில், கைது செய்யப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது.

அத்துடன் பொதுமக்களின் காணிகளை இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளமையை எதிர்த்தும், அவர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் எனக் கோரியும் குரல் கொடுக்கப்பட்டிருக்கின்றது. இதற்கான அழைப்பை பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலைக்கான அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.

இதேவேளை, மன்னாரில் கைது செய்யப்பட்டும், கடத்தப்பட்டும் காணாமல் போயுள்ளவர்களின் உறவினர்களும் பொதுமக்களும் ஒன்று கூடி, அவர்களை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி ஆர்ப்பாட்டம் செய்திருக்கின்றார்கள்.

மேலும், விசாரணைகளின்றி நீண்ட நாட்களாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என நாடளாவிய ரீதியில் தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் அவசர தந்திகள் மூலமாக ஜனாதிபதியிடம் கோரியிருக்கின்றார்கள்.

இதற்கிடையில் கைது செய்யப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்களில் ஆறு பேர் ஞாயிறு இரவு விடுதலை செய்யப்பட்டிருப்பதாகப் காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றார்கள். விடுதலை செய்யப்பட்டவர்களில் 5 பேர் மருத்துவ பீடத்தைச் சேர்ந்த மாணவர்கள் என் உறவினர்கள் தெரிவித்திருக்கின்றார்கள்.

ஏற்கனவே கைது செய்யப்பட்டு விடுதலையின்றி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள 3 மாணவர்களும், மேலும் ஒரு மாணவருமாக 4 பேர் தொடர்ந்தும் பயங்கரவாதப் பலனாய்வு பிரிவினரால் விசாரணை செய்யப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

அனைத்துலக மனித உரிமை தினமாகிய டிசம்பர் 10 அன்று யாழ்ப்பாணத்தில் விசாரணைக்காகக் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் தொடர்பாக தங்களிடம் இரண்டு முறைப்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக யாழ் மனித உரிமைகள் அலுவலகத்தினர் தெரிவித்திருக்கின்றனர்.

கடந்த ஒரு வார காலத்தில் யாழ்குடா நாட்டின் பல பகுதிகளிலும் 20 பேர் காவல்துறையினராலும் படையினராலும் கைது செய்யப்பட்டிருப்பதாக உறவினர்கள் தம்மிடம் முறையிட்டிருப்பதாகவும், இது தொடர்பான விசாரணைகளை தாங்கள் மேற்கொண்டிருப்பதாகவும் யாழ் மனித உரிமைகள் அலுவலகத்தினர் கூறியிருக்கின்றனர்.

TAGS: