தை பிறந்தால் வழி பிறக்கும் எனும் தமிழர்களின் வாழ்வியலின் நம்பிக்கைச் சொல்வழிக்கமைய தமிழர் மரபுத் திங்களென தை மாதத்தினை தமிழினத்தின் பாராம்பரிய மாதமாக கனடாவிலுள்ள மாநகர மன்றங்கள் பல அங்கீகரித்துள்ளமையானது பெருமைக்குரிய விடயமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி. உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.
நாடுகடந்த தழிழீழ அரசாங்கத்தின் கலை கலாச்சார அமைச்சினால் கனடாவில் இடம்பெற்றிருந்த ‘தமிழ் மரபுத் தைத் திருவிழா’ நிகழ்வரங்கில் ஒளிபரப்பபட்ட காணொளியுரையிலேயே பிரதமர் வி.உருத்திரகுமாரன் இவ்வாறு தெரிவித்தார்.
உலகிலுள்ள மொழிகளில் மிகத் தொன்மையானதும் இன்று வரை தொடர்ந்து நிலைத்து நிற்பதும்
எமது தாய் மொழியான தமிழ் மொழியாகும். திராவிட மொழிகளுக்கு எல்லாம் தாய் மொழி தமிழ். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, முதற் சங்கம், இடைச் சங்கம், கடைச் சங்கமென முச்சங்கள் அமைக்கப்பட்டு பேணி வளர்க்கப்பட்டது தமிழ் மொழி. தமிழ் மறையெனப் போற்றப்படும் திருக்குறள் உலகப் பொது நூலாகக் கருதப்பட்டு பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இத்தகைய பெருமைக்குரிய தமிழ் மக்களுக்கு தனியான நாடு ஒன்று இல்லாதிருப்பது வேதனைக்குரியதாகும் எனத் தெரிவித்த உருத்திரகுமாரன், தமிழருக்கென தனி நாடாக சுதந்திர தமிழீழத்தினை அமைப்பதே நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் குறிக்கோளாகும் எனத் உறுதிபடத் தெரிவித்தார்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கனேடியப் பிரதிநிதிகளில் ஒருவரான கலை கலாச்சார துணை அமைச்சர் வின் மகாலிங்கம் அவர்களது நெறிப்படுத்தலில் இடம்பெற்றிருந்த இந்நிகழ்வில், நா.தமிழீழ அரசாங்கத்தின் அரசவை உறுப்பினர் ஈழவேந்தன், கலாநிதி பாலசுந்தரம், என்.டி.பி.கட்சியின் ஒன்ராறியோ மாகாணத் தலைவர் நீதன் சான், தமிழ் கொங்கிரஸ் உறுப்பினர்மருத்துவர் ராம்குமார், கலாசூரி சிவநேசச் செல்வர், அறிவகம் அமைப்பின் தலைவர் அருள்சுப்பிரமணியம், கதிர்ஒளி பத்திரிகை ஆசிரியர் போள் ராஜபாண்டியன் ஆகியோர் தைச்சுடரேற்றி நிகழ்வினை தொடங்கி வைத்திருந்தனர்.