மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 5 ஆண்டு ஆட்சியை முழுமையாக முடிக்கும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறி வருகிறார். ஆனால் மத்திய அரசின் ஆட்சி பற்றி மக்களிடம் நல்ல மதிப்பு ஒன்றும் இருப்பதாக தெரியவில்லை.
மக்கள் மனசு என்ற பெயரில் விகடன் நடத்திய சர்வேயில் இது தெரியவந்துள்ளது. மகா, மெகா ஊழல்கள், அதை மறைக்க மத்திய அரசு செய்யும் வேலைகள் போன்றவை மக்களின் மனதில் மிகப்பெரிய கொதிப்பையே ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கிறது.
கடந்த முறை 5 ஆண்டு காலத்தை ஆண்ட காங்கிரஸ் கூட்டணி அரசு மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தது. இதோ நான்கு ஆண்டுகாலம் முடிந்துவிட்டது. மத்திய அரசின் இந்த 4 ஆண்டு கால ஆட்சி எப்படி இருக்கிறது என்று கேட்கப்பட்ட கேள்விக்கு மிகவும் மோசம் என்று 4,561 பேர் கூறியுள்ளனர். மோசம் என்று 1,584 பேரும், சுமார் என்று 1,492 பேரும் குறிப்பிட்டுள்ளனர். பிரமாதம் என்று 119 பேர் சர்வேயில் தெரிவித்துள்ளனர்.
காங்கிரசுக்கு ஓட்டு கிடையாது
மத்திய அரசின் 4 ஆண்டுகால சாதனை மற்றும் செயல்பாடுகளை வைத்து யாருக்கு வாக்களிப்பீர்கள் என்ற கேள்விக்கு வாக்களிக்க மாட்டேன் என்று 5,416 பேர் கூறியுள்ளனர்.
தேர்தல் நேரத்தில் முடிவெடுப்பேன் என்று 2,089 பேரும், காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களிப்பேன் என்று 251 பேரும் கூறியுள்ளனர். மத்தியில் ஆளும் கூட்டணி ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களுக்கான பதில் வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.