இலங்கைக்கு அளித்து வரும் நிதியுதவில் 20 சதவீதத்தை குறைக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. அதேசமயம் மாலத்தீவுக்கான நிதி உதவியை அதிகரித்துள்ளது. இதற்கான பரிந்துரையை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான்கெர்ரி, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சமர்பித்துள்ளார்.
இலங்கையின் வடகிழக்கு பகுதியில் போரால் இடம்பெயர்ந்த மக்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்த அமெரிக்கா முயற்சி மேற்கொண்டபோதிலும், அதற்கு பலன் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு செயல்படுத்தப்படும் திட்டங்களில் ராணுவத்தின் தலையீடு அதிகமாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. அதனால், அடுத்தாண்டு இலங்கைக்கு வழங்க உத்தேசிக்கப்பட்டிருந்த 8 பில்லியன் டாலர் நிதியுதவி, 6 பில்லியன் டாலராக குறைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உள்நாட்டு போர் முடிந்த பிறகும் மனித உரிமை மீறல் அதிகரித்து வருவதாலும், மறுசீரமைப்பு மற்றும் அரசியல் நடவடிக்கைகள் மேம்படுத்தப்படாததாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கைக்கு அமெரிக்கா அளித்து வரும் நிதியுதவியில் பெருமளவு, நிதித்துறை சீர்திருத்தங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. வங்காள தேசத்திற்கும் இந்த ஆண்டிற்கான நிதி உதவியைக் குறைத்துள்ள கெர்ரி, மாலத்தீவுகளுக்கு அதிகரிக்கும்படி அரசிடம் பரிந்துரைத்துள்ளார்.