தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பிளவு?

TNA_ranilஇலங்கையில் தமிழ் மக்களின் முக்கிய அரசியல் அணியாக உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தனியான அரசியல் கட்சியாக பதிவதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி உடன்பட வேண்டும் என்று அந்தக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய நான்கு தமிழ்க் கட்சிகளும் இரண்டு வார காலக்கெடு விதித்துள்ளன.

அடுத்துவரும் இரண்டு வார காலத்துக்குள் ஐந்து கட்சிகளுக்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்படாவிட்டால், தமிழரசுக் கட்சி தவிர்ந்த நான்கு கட்சிகளும் சேர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக தம்மைப் பதிவுசெய்துகொள்ள முடிவெடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கூறினார்.

இதுபற்றி தனது தலைமையிலுள்ள டெலோ எனப்படும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் மத்திய குழுவிலும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தனிக்கட்சியாகப் பதியவேண்டுமென்று கூட்டணிக் கட்சிகள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்துவந்தும் அதற்கு தமிழரசுக் கட்சி உடன்படவில்லை என்றும் அவர் கூறினார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஈபிஆர்எல்எஃப், புளொட், டெலோ, தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய ஐந்துக் கூட்டணிக் கட்சிகளுமே தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற அடிப்படையில் இயங்கிவருகின்றன.

ஆனால், புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றின் அடிப்படையில் தேர்தல் திணைக்களத்தில் பதிவுசெய்யப்பட்டக் கட்சியாக தமது கூட்டமைப்பு அமைய வேண்டுமென்று மற்றக்கட்சிகள் சம்பந்தன் தலைமையிலான தமிழரசுக் கட்சியுடன் பேச்சுவார்த்தைகளை நடத்திவந்துள்ளன.

ஒற்றுமையை வலியுறுத்தியே இதுவரை காலமும் தாம் காத்திருந்ததாகவும் ஆனால், எதிர்வரும் இரண்டு வாரத்துக்குள் தமது கட்சிகளுக்கிடையில் ஒருமித்த கருத்து சாத்தியப்படாவிட்டால் நான்கு கட்சிகள் மட்டும் தனித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று டெலோ இயக்கத்தின் தலைவர் கூறினார்.

ஏனைய சக கட்சிகளும் இந்த விடயம் தொடர்பில் தமது மத்திய குழுக்களைக் கூட்டி முடிவெடுத்த பின்னர், பதிவு விடயம் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் அனைத்தும் ஒரே கட்டமைப்புக்குள் இயங்குவதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளதாகவும் தமக்கிடையில் புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளதாகவும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா தமிழோசையிடம் கூறினார்.

தமிழர் பிரதேசங்களில் தீவிரமடைந்துகொண்டிருக்கும் இராணுவ நில ஆக்கிரமிப்புக்களுக்கு எதிராக போராட வேண்டிய நேரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் குழப்பங்களை ஏற்படுத்தும் பிரச்சாரங்களுக்கு இடமளிக்கக்கூடாது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கூறினார்.

வட மாகாணசபை தேர்தல் நடந்தால், அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒற்றுமையுடன் போட்டியிடும் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாகவும் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

-BBC

TAGS: