திமிங்கலம் போன்ற கடல்வாழ் பாலூட்டி விலங்குகள் நீருக்கடியியில் ஒரு மணி நேரம் வரை மூச்சை அடக்கிக்கொள்ள முடியும் அளவுக்கு அவை தமது உடலில் பிராணவாயுவை எவ்வாறு சேமிக்கின்றன என்று கண்டுபிடித்துவிட்டதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
சுற்றாடலுக்கு ஏற்ப பிராணிகளில் உடலில் மாற்றங்களை ஏற்படுத்தும் பரிணாம வளர்ச்சியின் சிறப்பான உதாரணமாக கடல்வாழ் பாலூட்டி விலங்குகள் சுவாசிக்காமல் ஒரு மணி நேரம் வரையில் நீருக்கடியில் இருப்பது கருதப்படுகிறது.
இவ்வகையான பிராணிகளின் உடலில் உள்ள மயோகுளோபின் என்ற புரதத்தை விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர்.
இவ்விலங்குகளின் தசைகளில் காணப்படும் இந்த புரதம், பிராணவாயுவை சேமித்துவைக்கவல்லது.
திமிங்கலங்கள், சீல்கள் போன்ற பிராணிகளில் உள்ள மயோகுளோபின்கள் ‘ஒட்டாமல் விலகிற்கும்’ விசேடத் தன்மையைக் கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இதன் காரணமாக இந்தப் புரதம் பெருமளவான ஆக்ஸிஜனை தம்முள் சேமித்துவைக்கின்ற போதிலும் “அளவுக்கதிகமான காற்றடைத்த பந்துகளாக” அந்த விலங்குகள் திணறாமல் இருக்க இத்தன்மை உதவுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் கண்டுபிடிப்பின் விவரங்கள் சயின்ஸ் என்ற சஞ்சிகையில் பிரசுரமாகியுள்ளன.
சாதாரணமாக மயோகுளோபின் புரதம் அதிகமாக ஒன்று சேரும்போது அவை ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொள்ளும்.
ஆனால் குறிப்பிட்ட இந்த கடல்வாழ் பாலூட்டி விலங்குகளிடம் இப்புரதம் அவ்வாறு ஒட்டிக்கொள்வதில்லை.
“அதனால்தான் அதிகமான காற்றை உடல் திசுக்களில் சுமந்துகொண்டிருந்தாலும், இந்த விலங்குகளால் இயங்க முடிகின்றன” என்று இந்த ஆய்வில் பங்கேற்ற லிவர்பூல் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானி டாக்டர் மைக்கேல் மெரென் பிரிங்க் பிபிசியிடம் கூறினார். -BBC