UNHCR பாதுகாப்பு கோரும் அகதிகள், மலேசியச் சட்டத்திற்குக் கட்டுப்பட்டு, உள்ளூர் சமூகங்களில் அமைதியின்மையை ஏற்படுத்தாமல் நடக்க வேண்டும் என்று அன்வர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
மலேசியாவின் பினாங்கு பகுதியிலிருந்து பயணம் செய்த நூற்றுக்கணக்கான ரோஹிங்யா அகதிகள், கோலாலம்பூரில் உள்ள ஐ.நா அகதிகள் பிரிவு (UNHCR) அலுவலகத்திற்கு வெளியே கூடியிருப்பதாக வந்த தகவல்களை அடுத்து, பிரதமர் அன்வார் இப்ராஹிம் ‘கடுமையான நடவடிக்கை’ எடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
பிரதமர் அன்வார் இப்ராஹிம், போக்குவரத்திற்கு இடையூறு விளைவிப்பது மற்றும் பொது இடங்களில் ஒன்று கூடுவது உட்பட, பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிங்கியா அகதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
சட்டத்தை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு குடிவரவுத் துறை, காவல்துறை மற்றும் கோலாலம்பூர் மாநகராட்சி (DBKL) ஆகியவற்றுக்கு அன்வார் அறிவுறுத்தியுள்ளார்.
“அவர்கள் ஐ.நா அகதிகள் முகமையின் (UNHCR) அலுவலகத்திற்கு அருகே ஒன்று கூடி போக்குவரத்திற்கு இடையூறு விளைவிக்கின்றனர். நாம் உறுதியாகச் செயல்பட வேண்டும். இந்த நாட்டிற்கு விதிகள் மற்றும் சட்டங்கள் உள்ளன. அவர்கள் நகரத்தின் எந்தப் பகுதியையும் தங்களுக்கு விருப்பம்போல ஆக்கிரமிக்க முடியாது,” என்று கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற 2026-ஆம் ஆண்டிற்கான சர்வதேச தாவா மற்றும் வக்ஃப் மாநாட்டின் நிறைவு விழாவில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.
“செல்லுபடியாகும் ஆவணங்கள் இல்லாதவர்கள் குடிவரவுத் துறையின் காவலில் வைக்கப்பட வேண்டும். ஆவணங்கள் உள்ளவர்கள் சட்டத்திற்கு உட்பட்டு நடக்காவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட வேண்டும்.”
அகதிகள் UNHCR-இடமிருந்து பாதுகாப்பு கோருகிறார்கள் என்பதை அரசாங்கம் புரிந்து கொண்டாலும், அவர்கள் மலேசிய சட்டங்களுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
மேலும், உள்ளூர் சமூகங்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் அகதிகள் செயல்படுவதை அரசாங்கம் அனுமதிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.
காவல்துறையும் குடிவரவுத் துறையும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றும் நான் நினைவூட்டுகிறேன். பெண்கள் மற்றும் குழந்தைகளைப் பாதுகாக்க இத்தகைய நடவடிக்கை அவசியம், ஆனால் நாம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன்.
“சட்டத்தை மதிக்காமல் நாட்டின் எந்தப் பகுதியையும் அவர்கள் விருப்பம்போல ஆக்கிரமிக்க நாம் அனுமதிக்க முடியாது,” என்று அவர் கூறினார்.
பினாங்கிலிருந்த பயணப்பட்டு வந்ததாகக் கூறப்படும் நூற்றுக்கணக்கான ரோஹிங்கியா அகதிகள், ஜாலான் புக்கிட் பெட்டாலிங்கில் உள்ள UNHCR அலுவலகத்திற்கு வெளியே கூடியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உள்ளூர்வாசிகள் தங்களை ஒரு குடியிருப்பில் இருந்து வெளியேற வற்புறுத்தியதாகக் கூறி, பாதுகாப்பு மற்றும் தங்களுடைய நிலைக்குத் தீர்வு கோரி அவர்கள் அங்கு கூடியதாகக் கூறப்படுகிறது.
இந்தக் கூட்ட நெரிசல் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன், அப்பகுதி மக்களிடையே கவலையையும் ஏற்படுத்தியது.
























