14 முதலீடுகள் தாபுங் ஹாஜிக்கும் அரசாங்கத்திற்கும் கிட்டத்தட்ட 13 பில்லியன் மலேசிய ரிங்கிட் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக இரண்டாம் நிதியமைச்சர் அமீர் அம்சா அசிசான் தெரிவித்துள்ளார்.
இன்று மக்களவையில் தாபுங் ஹாஜி (Tabung Haji) தொடர்பான அரச விசாரணை ஆணையக் (RCI) அறிக்கை மீதான சிறப்பு அமர்வில், இரண்டாம் நிதியமைச்சர் அமீர் அம்சா அசிசான் உரையை நிறைவு செய்து பேசினார்.
தாபுங் ஹாஜியின் (Tabung Haji) நிதி மேலாண்மை குறித்து நடத்தப்பட்ட அரச விசாரணை ஆணையம் (RCI) கண்டறிந்த சிக்கலுக்குரிய 14 முதலீடுகளில், ஏழு முதலீடுகள் முழுமையான இழப்பில் முடிந்ததாக இரண்டாம் நிதியமைச்சர் அமீர் ஹம்சா அசிசான் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
2014 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் யாத்திரிகர்களின் நிதியை நிர்வகித்த விதத்தை RCI ஆய்வு செய்தது. அந்த 14 முதலீடுகளால் கிட்டத்தட்ட ரிம 13 பில்லியன் இழப்பு ஏற்பட்டதாக அமீர் தெரிவித்தார். 2018ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கையின் மூலம் அரசாங்கம் ரிம 10.2 பில்லியனை ஈடு செய்தது. அதேவேளை, 2018 முதல் 2025 வரை TH மேலும் ரிம 2.6 பில்லியன் இழப்பை ஏற்றுக்கொண்டது.
“14 முதலீடுகளில் ஏழு முதலீடுகள் முழுமையான இழப்புகளாகும்,” என்று அரச விசாரணை ஆணைய அறிக்கை குறித்த சிறப்பு அமர்வில் தனது தொகுப்புரையின் போது அவர் கூறினார்.
இந்த இழப்புகள் சந்தை நிலவரங்களால் மட்டும் ஏற்படவில்லை என்று கூறிய அமீர், போதிய முன்னெச்சரிக்கை ஆய்வுகள் (due diligence) இன்மை, பலவீனமான பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் தாபுங் ஹாஜியின் சொந்த அதிகாரிகளின் எச்சரிக்கைகளையும் மீறி சில ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்தார்.
சவூதி அரேபியாவைச் சேர்ந்த அல்-ரவ்தா ரியல் எஸ்டேட்ஸ் டெவலப்மென்ட் & புராஜெக்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தில் (Al-Rawda Real Estates Development & Project Management Co Ltd) தாபுங் ஹாஜி செய்த முதலீட்டிலேயே மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டது.
அல்-ரவ்தா முதலீடானது 2015 முதல் 2017 வரையிலான குத்தகை ஒப்பந்தங்களை உள்ளடக்கியது என்றும், அதில் மலேசிய ஹஜ் யாத்ரீகர்களுக்கு தங்குமிடம் வழங்குவதற்காக மக்கா மற்றும் மதினாவில் உள்ள நான்கு ஹோட்டல்களைக் குத்தகைக்கு எடுக்க, இடைத்தரகர் ஒருவருக்கு தாபுங் ஹாஜி 1.4 பில்லியன் சவூதி ரியால் (கிட்டத்தட்ட ரிம 1.5 பில்லியன்) செலுத்தியதாகவும் அமீர் கூறினார்.
அந்த நிறுவனம் நான்கு ஹோட்டல்களையும் நடத்தி, தாபுங் ஹாஜிக்கு 2.49 பில்லியன் சவூதி ரியால் வாடகையாகச் செலுத்த வேண்டியிருந்தது, ஆனால் அத்தொகை செலுத்தப்படவில்லை; மேலும் இந்த பெரிய அளவிலான முதலீட்டிற்கு பிணை முறிச் சீட்டுகள் (promissory notes) மூலம் தனிப்பட்ட முறையில் மட்டுமே உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்தது என்றும் அவர் தெரிவித்தார்.
அல்-ரவ்தா நிறுவனம் 2019-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இருந்து வாடகை செலுத்துவதில் தவறியது, இறுதியில் 2024-இல் தாபுங் ஹாஜி 1 பில்லியன் ரிங்கிட் தொகையை முழுமையான இழப்பாக (full impairment loss) அங்கீகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
2014-ஆம் ஆண்டில் புத்ராஜாயா பெர்டானா (Putrajaya Perdana) நிறுவனத்தில் 30% பங்குகளை ரிம 193.5 மில்லியனுக்கு தாபுங் ஹாஜி வாங்கியதையும் அமீர் சுட்டிக்காட்டினார். தாபுங் ஹாஜியின் சொந்த ஆராய்ச்சிப் பிரிவு அந்தப் பங்குகளின் மதிப்பை ரிம 124 மில்லியன் முதல் ரிம 155 மில்லியன் வரை மட்டுமே மதிப்பிட்டிருந்தது, ஆனால் அதிக விலை கொடுத்து வாங்கியதற்கு எழுத்துப்பூர்வமான எந்தக் காரணமும் இல்லை என்று அவர் கூறினார்.
புத்ரஜெயா பெர்டானாவின் 30% பங்குகளை தாபுங் ஹாஜிக்கு விற்ற ‘செண்டானா டெஸ்டினி’ (Cendana Destiny) நிறுவனத்தின் உண்மையான உரிமையாளர் யார் என்பதைக் கண்டறியுமாறு தாபுங் ஹாஜியின் முதலீட்டுக் குழு நிர்வாகத்திற்கு உத்தரவிட்டிருந்ததாக அவர் கூறினார்.
இருப்பினும், எந்தப் பதிலும் அளித்ததற்கான பதிவுகள் எதுவும் இல்லை என்று 2023-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்த போதிலும், ரிம 193.5 மில்லியன் மதிப்பிலான ஒப்பந்தம் தொடர்ந்ததாக அமீர் கூறினார்.
டிஎச் ஹெவி இன்ஜினியரிங் (TH Heavy Engineering) நிறுவனத்துடன் தொடர்புடைய கடலோரக் காவல் கப்பல் திட்டத்தின் தடம் அறி தணிக்கையில் (forensic audit) ரிம 48.1 மில்லியன் முறைகேடுகள் கண்டறியப்பட்டதாகவும், மேலும் ரிம 195 மில்லியன் அளவிலான சாத்தியமான முறைகேடுகள் குறித்து இன்னமும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
திட்டமிடப்பட்ட மூன்று கப்பல்களில் ஒன்று மட்டுமே கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மற்ற இரண்டையும் முடிப்பதற்கு அரசாங்கத்திற்கு மேலும் ரிம 310 மில்லியன் செலவாகும்.
இந்தோனேசியப் பண்ணையை வாங்கியவர் தனது கடமைகளை நிறைவேற்றத் தவறியதை அடுத்து, தாபுங் ஹாஜி அவருக்கு 178.6 மில்லியன் அமெரிக்க டாலரை முன்பணமாக வழங்கியதாகவும் அமீர் கூறினார். அந்தப் பணம் கடந்த ஆண்டுதான் திரும்பச் செலுத்தப்பட்டது.
“வேறு வார்த்தைகளில் கூறுவதானால், விற்பனையாளரே (தாபுங் ஹாஜி) தனது பொருளை வாங்குபவருக்கு நிதி உதவி அளித்துள்ளார்,” என்று அவர் கூறினார்.
இந்த நடைமுறை சாதாரண முதலீட்டு இழப்புகளுக்கு அப்பாற்பட்டது என்று அமீர் கூறினார்.
“பாதுகாப்பு உத்தரவாதம் இல்லாமல் முன்பணம் செலுத்துவது, பணம் பெறுவதற்கு முன்பே பங்குகளை ஒப்படைப்பது மற்றும் திட்ட நிதியை வேறு வழியில் திருப்புவது… ஆகியவற்றை வெறும் துரதிர்ஷ்டவசமான முதலீடு என்று கூறிவிட முடியாது,” என்று அவர் கூறினார்.
இச்சம்பவங்கள் குறித்த விசாரணைகள் தொடர்ந்து நடைபெறும் என்றும், தவறிழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
























