தோல்வியடைந்த முதலீட்டுக்காக நிறுவனம் மற்றும் 2 பங்குதாரர்கள் ரிம 1.08 மில்லியன் செலுத்த நீதிமன்றம் உத்தரவு

Energy Eco Bhd நிறுவனம், ஆவணங்களை வெளியிடுமாறு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைப் பின்பற்றத் தவறியதற்கான நியாயமான காரணங்கள் எதையும் முன்வைக்கவில்லை என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முதலீட்டாளர்கள் தங்களிடம் இருந்து பெற்ற ரிம 1 மில்லியன் முதலீட்டுக்கான அசல் தொகையையும், வாக்குறுதியளிக்கப்பட்ட வருமானத்தையும் திருப்பிச் செலுத்தத் தவறியதால், அவர்கள் Energy Eco Bhd நிறுவனத்திற்கும் அதன் முக்கிய பங்குதாரர்களான  டவுட் பாக்கர்(Daud Bakar) மற்றும் Norliza Tajudin(நார்லிசா தாஜூடின்) ஆகியோருக்கும் எதிராக வழக்குத் தொடர்ந்தனர்.

ஒரு நிறுவனமும் அதன் இரு முக்கிய பங்குதாரர்களும், ஆவணங்களை சமர்ப்பிக்க நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைப் பின்பற்றத் தவறியதால், அவர்களின் தற்காப்பு வாதத்தை (defence) உயர் நீதிமன்றம் நிராகரித்ததைத் தொடர்ந்து, இரு முதலீட்டாளர்களுக்கு மொத்தம் ரிம 1.08 மில்லியன் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளனர்.

நீதித்துறை ஆணையர் அஸ்மாடி ஹுசைன், Energy Eco Bhd, Daud Bakar மற்றும் Norliza Tajudin ஆகியோர் Borneo Eduexcel Sdn Bhd மற்றும் Geomatika Sabahedu Sdn Bhd நிறுவனங்களுக்கு அந்தத் தொகையை கூட்டாகவும் தனித்தனியாகவும் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.

மேலும், அதற்கான வட்டி மற்றும் பொதுநஷ்டஈடு (general damages) பின்னர் மதிப்பிடப்பட வேண்டும் என்றும், வழக்குச் செலவாக ரிம 20,000 வழங்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

2024 ஏப்ரல் மாதத்தில், இரு மனுதாரர்களும் Energy Eco நிறுவனத்தில் ரிம 1 மில்லியனை “shareholder advance agreement” எனப்படும் பங்குதாரர் முன்பண ஒப்பந்தத்தின் கீழ் முதலீடு செய்திருந்தனர். அந்த ஒப்பந்தத்தின்படி, ஆறு மாதங்களுக்குள் 8% வருமானத்துடன் பணம் திருப்பிச் செலுத்தப்படும் எனக் கூறப்பட்டிருந்தது.

ஆனால், ஆறு மாத காலம் முடிந்தபோதும், நிறுவனம் முதலீட்டுத் தொகையான ரிம 1 மில்லியனையும் வாக்குறுதியளிக்கப்பட்ட வருமானத்தையும் திருப்பிச் செலுத்தவில்லை.

இதையடுத்து, மனுதாரர்கள் நிறுவனம் மற்றும் அந்த இரு தனிநபர்களுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தனர். அலட்சியம் (negligence) மற்றும் மோசடியான தவறான விளக்கம் (fraudulent misrepresentation) உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை அவர்கள் முன்வைத்தனர். குறிப்பாக, Energy Eco நிறுவனம் வைப்புத்தொகைகள் அல்லது முதலீட்டுத் தொகைகளை வசூலிக்க உரிமம் பெற்றிருந்ததாக Norliza மற்றும் Daud தங்களிடம் தெரிவித்ததாக அவர்கள் குற்றம் சாட்டினர்.

ஆனால், பிரதிவாதிகள் தங்களுக்கு பொறுப்பு இல்லை என்று மறுத்தனர். இந்த முதலீடு ஆபத்துகளுக்கு உட்பட்டது என்றும், Energy Eco நிறுவனம் திவாலான நிலையில் இருந்ததால், லாபப்பங்குகள் அல்லது இலாபங்களை வழங்க வேண்டிய கட்டாயம் நிறுவனத்திற்கு இல்லை என்றும் அவர்கள் வாதிட்டனர்.

எனினும், மே 25 அன்று நீதிமன்றம் பிறப்பித்த ஆவணங்களை வெளிப்படுத்தும் உத்தரவை (discovery order) பிரதிவாதிகள் பின்பற்றத் தவறியதாக நீதிமன்றம் கண்டறிந்தது.

அந்த உத்தரவின்படி, வங்கிக் கணக்கு அறிக்கைகள், வங்கிக் கணக்குகளில் கையொப்பமிட அதிகாரம் பெற்ற நபர்களின் விவரங்கள், நிறுவனத்தின் வணிக விரிவாக்கத் திட்டங்களின் பட்டியல் மற்றும் நிர்வாகக் கணக்குகள் உள்ளிட்ட ஆவணங்களை அவர்கள் சமர்ப்பிக்க வேண்டியிருந்தது.

ஜனவரி மாதத்தில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC அந்த ஆவணங்களை பறிமுதல் செய்திருந்ததால் அவற்றை சமர்ப்பிக்க முடியவில்லை என்று பிரதிவாதிகள் தெரிவித்தனர்.

ஆனால், இதை நியாயமான காரணமாக நீதித்துறை ஆணையர் அஸ்மாடி ஏற்கவில்லை. பிரதிவாதிகள் தங்களது கணக்காய்வாளர் (auditor) அல்லது நிறுவனச் செயலாளரிடமிருந்து (company secretary) அந்த ஆவணங்களின் பிரதிகளைப் பெற்றிருக்க முடியும் என்று அவர் கூறினார்.

மேலும், கேட்கப்பட்ட அனைத்து ஆவணங்களும் MACC ஆல் பறிமுதல் செய்யப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

MACC பறிமுதல் செய்த வங்கிக் கணக்கு அறிக்கைகள் 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுகளுக்குரியவை. ஆனால், நீதிமன்றத்தின் ஆவண வெளிப்படுத்தும் உத்தரவு 2024ஆம் ஆண்டு முதல் தொடரும் ஆவணங்களைக் கோரியிருந்தது.

நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றுவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்குமாறும் பிரதிவாதிகள் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கவில்லை என்று அஸ்மாடி கூறினார்.

அவர் கூறியதன் படி, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு (MACC) ஆவணங்களைக் கேட்டு அனுப்பப்பட்ட கடிதங்கள், வாதிகள் (plaintiffs) தற்காப்பு வாதத்தை ரத்து செய்ய விண்ணப்பித்து, சாட்சியப் பிரமாணப் பத்திரங்களும் (affidavits) மற்றும் வாதங்களும் (submissions) பரிமாறிக்கொள்ளப்பட்ட பின்னரே, ஒரு கூடுதல் சாட்சியப் பிரமாணப் பத்திரத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

நீதிமன்றத்தின் ஆவண வெளிப்படுத்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு சுமார் நான்கு மாதங்களுக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை மிகவும் தாமதமான முயற்சி என்று அவர் விவரித்தார்.

நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றத் தவறியதற்கு பிரதிவாதிகள் எந்தவொரு நியாயமான காரணத்தையும் வழங்கவில்லை என்றும் அவர் கூறினார்.

Borneo Eduexcel Sdn Bhd மற்றும் Geomatika Sabahedu Sdn Bhd ஆகியவற்றின் சார்பில் வழக்கறிஞர்கள் Hariharan Tara Singh மற்றும் Tan Eng Seng ஆஜரானார்கள். Energy Eco Bhd, Daud மற்றும் Norliza ஆகியோரின் சார்பில் Nyat Kai Wen ஆஜரானார்.